கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு


கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு
x
தினத்தந்தி 8 Feb 2021 11:41 AM IST (Updated: 8 Feb 2021 11:43 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.

பெரம்பலூர்,


கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து மூடப்பட்டன. அதன் பின்னர் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுடைய பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்திய பிறகு, அந்த மாணவர்களுக்கு கடந்த மாதம் 19-ந்தேதி முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் 2-ம் கட்டமாக 9, 11-ம் வகுப்புகளுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 149 பள்ளிகளும், அரியலூர் மாவட்டத்தில் 182 பள்ளிகளும் என மொத்தம் 331 பள்ளிகள் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று திறக்கப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

இதனால் நேற்று அந்தந்த பள்ளிக்கூடங்களில் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகளும், பள்ளி வளாகங்களில் தூய்மை பணிகளும், வகுப்பறையில் இருக்கைகள் ஏற்பாடு வசதி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளும் தலைமை ஆசிரியர்கள் தலைமையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. பள்ளிக்கு கட்டாயமாக மாணவ-மாணவிகள் முக கவசம் அணிந்தும், பெற்றோரின் இசைவு கடிதம் பெற்றும் வர வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் 9-ம் வகுப்புகளில் 8,256 மாணவ- மாணவிகளும், 11-ம் வகுப்புகளில் 7,108 மாணவ-மாணவிகளும், அரியலூர் மாவட்டத்தில் 9, 11-ம் வகுப்புகளில் மொத்தம் 38,976 மாணவ- மாணவிகளும் படிக்கின்றனர். அதில் மாணவர்கள், ஆசிரியர்கள், வகுப்பறைகள் எண்ணிக்கையை பொறுத்து வகுப்புகள், பாடப்பிரிவுகள் ஒரு நாள் விட்டு ஒருநாள் என்ற அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 25 பள்ளிகளும், அரியலூர் மாவட்டத்தில் ஒரு பள்ளியும் செயல்பட உள்ளது. ஷிப்டு அடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் 2 பள்ளிகள் செயல்பட உள்ளது.

Next Story