வேலூர் மாவட்டத்தில் 562 புதிய வாக்குச்சாவடி மையங்கள்
வேலூர் மாவட்டத்தில் 562 புதிய வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் 562 புதிய வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மையம் அமைப்பது தொடர்பான அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசியதாவது:-
கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்பாக தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் வழிமுறைகளை தெரிவித்துள்ளது.
1000 வாக்காளருக்கு மேலுள்ள வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரித்து புதிய வாக்குச்சாவடி மையங்கள் அதாவது துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படுகிறது. வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் பழுதடைந்த அல்லது சேதமடைந்த பழைய கட்டிடத்தில் உள்ள வாக்குச்சாவடிகளை அதே வளாகத்தில் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட உள்ளது.
562 புதிய மையங்கள்
புதிய கட்டிடம் இல்லையென்றால் அதே பகுதியில் உள்ள வேறு அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளில் மாற்றப்பட உள்ளது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 562 புதிய வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
காட்பாடி தொகுதியில் 118 மையங்களும், வேலூரில் 135 மையங்களும், அணைக்கட்டில் 108 மையங்களும், கே.வி.குப்பத்தில் 68 மையங்களும், குடியாத்தத்தில் 133 மையமும் என மொத்தம் 562 மையங்கள் அமைக்கப்படுகிறது.
5 தொகுதிகளிலும் 38 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்படுகிறது.
எனவே அரசியல் கட்சிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் யாருக்காவது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனில் தங்களது குறிப்புகளை எழுத்துப்பூர்வமாக 3 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத் தொடர்ந்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கணேஷ், உதவி கலெக்டர்கள் கணேஷ், ஷேக் மன்சூர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
--
Related Tags :
Next Story