புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருத்துவமனை
ஜோலார்பேட்டை அருகே புதிதாக கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனையை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே பாச்சல் ஊராட்சி, ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் ரூ.60½ லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட புதிய அறுவை சிகிச்சை வசதி கொண்ட கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து கலெக்டர் சிவன்அருள் தலைமையில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை தொடங்கி வைக்கும் விழா நடைபெற்றது. கால்நடை மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் வரவேற்றார். கால்நடை உதவி இயக்குனர் நாசர், திருப்பத்தூர் கால்நடை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) பிரசன்னா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு புதிதாக கட்டப்பட்ட கால்நடை அறுவை சிகிச்சை மருத்துவமனையை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
விழாவில் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேம்குமார், சங்கர் உள்ளிட்ட துறை அலுவலர்கள், அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர், முடிவில் கால்நடை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) பிரசன்னா நன்றி கூறினார்.
"
Related Tags :
Next Story