கடலூரில் குறைகேட்பு கூட்டம்: 10 மாதங்களுக்கு பிறகு பொதுமக்களிடம் நேரடியாக மனுக்கள் பெற்ற கலெக்டர்


கடலூரில் குறைகேட்பு கூட்டம்: 10 மாதங்களுக்கு பிறகு பொதுமக்களிடம் நேரடியாக மனுக்கள் பெற்ற கலெக்டர்
x
தினத்தந்தி 8 Feb 2021 10:46 PM IST (Updated: 8 Feb 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் நடந்த வாராந்திர குறைகேட்பு கூட்டத்தில் 10 மாதங்களுக்கு பிறகு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பொதுமக்களிடம் நேரடியாக மனுக்கள் பெற்றார்.

கடலூர், 

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெறவில்லை. 

அதன் பிறகு கொரோனா ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்ததன் அடிப்படையில் கடந்த 4 மாதங்களாக காணொலி காட்சி மூலம் கலெக்டர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, மனுக்கள் பெற்றார்.

மேலும் பொதுமக்கள் மனு அளிக்க வசதியாக, கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு புகார் பெட்டி வைக்கப்பட்டது. அதிலும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை போட்டு வந்தனர்.

மனுக்கள் பெற்ற கலெக்டர்

இந்த நிலையில் 8-ந் தேதி (அதாவது நேற்று) முதல் வாராந்திர குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர், பொதுமக்களை நேரடியாக சந்தித்து மனுக்கள் பெறுவார் என அறிவிக்கப்பட்டது. 
அதன்படி இன்று மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் அனைத்துத்துறை முதன்மை அலுவலர்களுடன் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி, சுமார் 10 மாதங்களுக்கு பிறகு பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து, மனுக்கள் பெற்றார்.


இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 212 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

சக்கர நாற்காலி

மனுக்களை பெற்ற கலெக்டர், அதனை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் சிதம்பரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விக்னேஷ் என்பவரது குடும்பத்துக்கு பொது நிவாரண நிதியில் இருந்து ஒரு லட்சம் ரூபாயும், சக்கர நாற்காலி வேண்டி மனு அளித்திருந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு சக்கரநாற்காலியையும் கலெக்டர் வழங்கினார்.

இதேபோல் 9 பயனாளிகளுக்கு இலவச சலவைப்பெட்டிகளையும், 10 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களையும் என மொத்தம் 24 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் முதியோர் மற்றும் ஆதரவற்ற நிலையில் உள்ள 10 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான ஆணையையும் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கார்த்திக்கேயன், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) காஞ்சனா, மாவட்ட சேமநல அலுவலர் வெற்றிவேல், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் பரிமளம், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, தாசில்தார் பலராமன் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story