திண்டிவனம் அருகே மரத்தில் கார் மோதல் தம்பதி உள்பட 4 பேர் பலி


திண்டிவனம் அருகே மரத்தில் கார் மோதல் தம்பதி உள்பட 4 பேர் பலி
x
தினத்தந்தி 8 Feb 2021 11:34 PM IST (Updated: 8 Feb 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் தம்பதி உள்பட 4 பேர் பலியாகினா்

திண்டிவனம், 

சென்னை மேடவாக்கம் விமலா நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன்(வயது 49). சாப்ட்வேர் என்ஜினீயர். இவருடைய மனைவி இந்துமதி (41), இவர் சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தில், வேளாண்மை அலுவலராக பணி புரிந்து வந்தார். இவர்களது மகன் முகிலன்(16).
இந்த நிலையில் செந்தில்நாதன் தனது குடும்பத்துடன் கள்ளக்குறிச்சியில் நடந்த உறவினர் திருமண விழாவுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி இன்று    காலை செந்தில்நாதன், இந்துமதி, முகிலன், செந்தில் நாதனின் அண்ணனான ஐ.சி.எப்.பில் பணிபுரிந்து வந்த கொளத்தூர் லட்சுமி நகரை சேர்ந்த குருநாதன்(54) ஆகியோர் ஒரு காரில் கள்ளக்குறிச்சிக்கு வந்தனர். 

மரத்தில் கார் மோதல்

பின்னர் விழா முடிந்ததும் அவர்கள் கள்ளக்குறிச்சியில் இருந்து மீண்டும் சென்னைக்கு புறப்பட்டனர். காரை செந்தில்நாதன் ஓட்டிச் சென்றார். அந்த கார், திண்டிவனம்-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
மதியம் 12.30 மணியளவில் திண்டிவனம் அடுத்த பாதிரி என்ற இடத்தில் சென்றபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடியது. இதில் காரில் இருந்தவர்கள் செய்வதறியாமல் கூச்சலிட்டனர். இருப்பினும் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கார், சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் செந்தில்நாதன், இந்துமதி, முகிலன், குருநாதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.

போலீசார் விசாரணை

விபத்து குறித்து தகவல் அறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விபத்துக்குள்ளான கார் மீட்பு வாகனம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்தால் திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story