இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் (பொறுப்பு) ராஜேந்திரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்நிலையில் குன்னம் தாலுகா புதுவேட்டக்குடியை சேர்ந்த ஆதிதிராவிடர் சமுதாய மக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் மாவட்ட தலைவர் செல்லதுரை, செயலாளர் கருணாநிதி ஆகியோர் தலைமையில் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் குடியிருக்க சொந்த வீடு இல்லாமல், ஒரே வீட்டில் நான்கு, ஐந்து குடும்பங்களாக வாழ்ந்து வரும் அவல நிலை உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்தும், அவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதையடுத்து அவர்களில் சிலர் சென்று கலெக்டரை சந்தித்து மனுக்களை கொடுத்தனர்.
முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்கள் மனு
இதேபோல் வேப்பந்தட்டை தாலுகா பசும்பலூர் கிராமத்தை சேர்ந்த முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர், கிராமத்தில் உள்ள 680 பேருக்கு நெற்குணம் கிராமத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்து கொடுத்து வந்தார். ஆனால் தற்போது அவர் ஓய்வூதியம் வழங்கும்போது சிறிய தொகை எங்களிடம் இருந்து பெறுவதாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு புகார் சென்றுள்ளது.
அதனால் ஓய்வூதியம் தொகை வழங்கும் பொறுப்பில் அவரை நீக்கி விட்டதாக வங்கி தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் மகேந்திரன் எங்களிடம் பணம் ஏதுவும் வாங்க மாட்டார். எனவே அவரை நீக்கக்கூடாது, என்றனர். அவர்களில் சிலர் இது தொடர்பான மனுவை கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கொடுத்தனர்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 446 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
Related Tags :
Next Story