வி.கைகாட்டியில் சாலையில் புழுதி பறப்பதால் பாதிப்பு; பொதுமக்கள் மறியல்
வி.கைகாட்டியில் சாலையில் புழுதி பறப்பதால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
வி.கைகாட்டி:
அணுகுசாலை
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் அரியலூர்-ஸ்ரீபுரந்தான் சாலை மிக முக்கிய சாலைகளாக விளங்கி வருகின்றன. இப்பகுதியில் சிமெண்டு ஆலை மற்றும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் உள்ளதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் 24 மணி நேரமும் சென்று வருகின்றன. இந்த சாலை வழியாக திருச்சி, கோவை, திருப்பூர், மதுரை, சென்னை, புதுச்சேரி, தஞ்சாவூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு அதிவிரைவு பஸ்களும் தினமும் சென்று வருகின்றன.
திருச்சி-சிதம்பரம் சாலை விரிவாக்க பணி முதற்கட்ட பணிகள் கடந்த 2019 ஆண்டு மே மாதம் தொடங்கி கல்லகம் கேட் முதல் மீன்சுருட்டி வரை சுமார் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகின்றது. மேலும் தேளூர், ரெட்டிப்பாளையம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட வி.கைகாட்டியில் மேம்பால பணி கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. இதற்காக சாலையின் இருபுறமும் அணுகுசாலை தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் புழுதி பறக்காமல் இருக்க, ஒப்பந்த பணியாளர்களை கொண்டு டேங்கர் லாரி மூலம் அவ்வப்போது தண்ணீர் தெளித்து வந்தனர்.
புழுதி பறப்பதால் பாதிப்பு
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அணுகுசாலையில் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் தெளிக்கவில்லை. இதனால் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது அப்பகுதியே புழுதி மண்டலமாக மாறி, இருசக்கர வாகனங்களில் சென்றவர்களின் கண்களை பாதிக்கிறது. ஒரு சிலருக்கு புழுதியை சுவாசிக்கும் போது முச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் வி.கைகாட்டி பகுதியில் சாலையோரம் உள்ள காய்கறி, தள்ளுவண்டி டிபன் கடை, ஓட்டல், டீக்கடைகள், பெட்டிக்கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் உணவு பொருட்களிலும் புழுதி படிந்து, பொருட்கள் அனைத்தும் வீணாகின்றன. இதனால் வியாபாரம் பாதிப்பதாக வியாபாரிகள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போன்றவர்களிடம் தெரிவித்தால், அப்போது மட்டும் சாலையில் தண்ணீர் தெளிக்க நடவடிக்கை எடுக்கின்றனர், மற்ற நேரங்களில் கண்டுகொள்வதில்லை, என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
மறியல்
மேலும் நேற்று மதியம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வி.கைகாட்டியில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கயர்லாபாத் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, புழுதி பறப்பது பற்றி தேசிய நெடுஞ்சாலை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து, அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். மறியலால் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story