நெல்லையப்பர் கோவில் நிலத்தில் வசிப்பவர்களிடம் நியாயமான குத்தகையை வசூலிக்க வேண்டும்


நெல்லையப்பர் கோவில் நிலத்தில் வசிப்பவர்களிடம் நியாயமான குத்தகையை வசூலிக்க வேண்டும்
x
தினத்தந்தி 9 Feb 2021 12:58 AM IST (Updated: 9 Feb 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையப்பர் கோவில் நிலத்தில் வசிப்பவர்களிடம் நியாயமான குத்தகையை வசூலிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் வலியுறுத்தினர்.

நெல்லை:
நெல்லையப்பர் கோவில் நிலத்தில் வசிப்பவர்களிடம் நியாயமான குத்தகையை வசூலிக்க வேண்டும் என்று கலெக்டரிடம், கிராம மக்கள் வலியுறுத்தினர்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சிமன்ற கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் காணொலிக்காட்சி வழியாக நடத்தப்பட்டது.

தொடர்ந்து கடந்த வாரத்தில் இருந்து கலெக்டர் விஷ்ணு மட்டும் நேரடியாக பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த வாரத்துக்கான மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் வழக்கம்போல் நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நெல்லை மாநகர் மாவட்ட பா.ம.க. செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமையில், மாநில துணை பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் சேந்திமங்கலம் கிராம மக்கள் திரளாக, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கலெக்டரிடம் மனு வழங்கினர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

நியாயமான குத்தகையை செலுத்த...

நெல்லை அருகே சேந்திமங்கலத்தில் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்குள்ள 54 சென்ட் இடத்தில் 2 தலைமுறையாக அதாவது 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம். முறையாக குத்தகை தொகையை செலுத்தி வருகிறோம். அங்கு அனைத்து சமுதாய மக்களும் வசித்து வருகின்றனர். நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம்.

இந்த நிலையில் இந்து அறநிலையத்துறை சார்பில் கடந்த 5-7-2018 அன்று எங்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் 54 சென்டில் குடியிருக்கும் 11 பேருக்கு பகுதி பகுதியாக குத்தகை பாக்கி மொத்தம் ரூ.2 லட்சத்து 64 ஆயிரத்து 777 இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எங்களால் இவ்வளவு தொகையை செலுத்த முடியாது. எனவே நியாயமான குத்தகையை செலுத்தி, நாங்கள் குடியிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இலவச வீட்டுமனை பட்டா

பாளையங்கோட்டை கக்கன்நகரைச் சேர்ந்த பொதுமக்கள், கலெக்டரிடம் வழங்கிய மனுவில், ‘பாளையங்கோட்டை கக்கன் நகரில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். நாங்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, மின் இணைப்பு ரசீது, வீட்டு தீர்வை ரசீது முறையாக பெற்றுள்ளோம். எனவே நாங்கள் வசிக்கும் இடத்தை எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவாக வழங்க வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தனர்.

பாளையங்கோட்டை கோட்டூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ராஜா வழங்கிய மனுவில், ‘எனது தந்தை அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி இறந்து விட்டார். நான் 90 சதவீதம் மாற்றுத்திறனாளியாக உள்ளேன். எனது குடும்பத்திற்கு நிரந்தர ஓய்வூதியம் வழங்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

Next Story