விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு


விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 9 Feb 2021 3:48 AM IST (Updated: 9 Feb 2021 3:55 AM IST)
t-max-icont-min-icon

ஒத்தக்கடை மின்வாரியத்தில் இருந்து விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கரூர்
குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வாரந்தோறும் திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம். கொரோனாவால் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. இருப்பினும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளிக்கும் வகையில் புகார் பெட்டி வைக்கப்பட்டு அதில் மனுக்கள் போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து கடந்த 1-ந் தேதி குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மலர்விழி தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது அச்சமாபுரத்தை சேர்ந்த ஞானசேகர் கொடுத்த மனுவில், கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், ஒத்தக்கடை துணைமின்நிலையத்தில் இருந்து நெர் அக்ரகாரம், மரவாபாளையம், என்.புதுப்பாளையம், ரெங்கநாதம்பேட்டை, திருமுக்கூடலூர், அச்சமாபுரம், சோமூர், செல்லிபாளையம், மின்னாம்பள்ளி, வேடிச்சிபாளையம், ஒத்தையூர், தன்னாசிகவுண்டன்புதூர் ஆகிய ஊர்களுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக புலியூரில் இருந்து வழங்கப்பட்டு வந்த மும்முனை மின்சாரம் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது.
மும்முனை மின்சாரம்
தற்போது ஒத்தக்கடை மின்வாரியத்தில் இருந்து வழங்கப்படும் மின்சாரம் விவசாயிகளுக்காக அரசு அறிவித்த காலநேரத்தில் மின்வினியோகம் செய்யப்படுவது இல்லை. இரவு 11.30 மணிக்கு கொடுக்கப்படும் மின்சாரம் இடையிடையில் நிறுத்தி அதிகாலை 5 அல்லது 5.15 மணிக்கு மும்முனை மின்சாரத்தை நிறுத்தி விடுகிறார்கள். மின்சாரத்தினை குறைத்து கொடுப்பதால் விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சமுடிவதில்லை. விவசாய பயிர்கள் காய்ந்து இப்பகுதி விவசாயிகள் மிகவும் வேதனையுடன் உள்ளார்கள். ஆகவே விவசாயிகளுக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் இரவு நேரத்தில் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை வழங்க உதவிபுரிந்து விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் காப்பாற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வாழ்வார்மங்களம் ஊராட்சியை சேர்ந்த சிலர் கொடுத்த மனுவில், வாழ்வார்மங்களம் ஊராட்சியில் குடிநீர் இணைப்பு பெறுவதற்கு ரூ.3600 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. கடவூர் ஒன்றியத்தில் மொத்தம் 20 ஊராட்சிகள் உள்ளது. ஆனால் இந்த ஊராட்சியில் மட்டும் நிர்பந்த கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. பொது குடிநீர் இணைப்பு என்பதே கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.

Next Story