9, 11-ம் வகுப்புகள் திறப்பு: 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு சென்றது மகிழ்ச்சியாக இருந்தது மாணவ-மாணவிகள் கருத்து


9, 11-ம் வகுப்புகள் திறப்பு: 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு சென்றது மகிழ்ச்சியாக இருந்தது மாணவ-மாணவிகள் கருத்து
x
தினத்தந்தி 9 Feb 2021 4:45 AM IST (Updated: 9 Feb 2021 4:45 AM IST)
t-max-icont-min-icon

9 மற்றும் பிளஸ்-1 வகுப்புகள் நேற்று திறக்கப்பட்டன. 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகளுக்கு சென்றது மகிழ்ச்சியாக இருந்தது என்று மாணவ -மாணவிகள் கூறினார்கள்

9, 11-ம் வகுப்புகள் திறப்பு:
10 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு சென்றது மகிழ்ச்சியாக இருந்தது
மாணவ-மாணவிகள் கருத்து
9 மற்றும் பிளஸ்-1 வகுப்புகள் நேற்று திறக்கப்பட்டன. 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகளுக்கு சென்றது மகிழ்ச்சியாக இருந்தது என்று மாணவ -மாணவிகள் கூறினார்கள். 
ஆன்லைன் வகுப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டன. மேலும் நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தது.
தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைய தொடங்கியதன் காரணமாக பள்ளிக்கூடங்களை திறக்க அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி முதல் கட்டமாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு மாணவ -மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
9, 11-ம் வகுப்புகள் திறப்பு
இந்த நிலையில் 2-ம் கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் 28 ஆயிரத்து 393 மாணவ -மாணவிகளுக்கும், பிளஸ்-1 படிக்கும் 24 ஆயிரத்து 873 மாணவ -மாணவிகளுக்கும் நேற்று வகுப்புகள் தொடங்கப்பட்டது.
கடந்த 10 மாதங்களாக பள்ளிக்கூடத்துக்கு செல்லாமல் இருந்த மாணவ -மாணவிகள் இந்த கல்வி ஆண்டின் முதல் நாளாக நேற்று பள்ளிக்கூடங்களுக்கு சென்றனர். 
பள்ளிக்கூடங்கள் திறப்பு குறித்து ஈரோடு மாணவ -மாணவிகளின் கருத்துகள் வருமாறு:-
பி.டி.அனுவர்ஷினி
நான் ஈரோடு அருகே உள்ள இந்தியன் பப்ளிக் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வருகிேறன். இந்த கல்வி ஆண்டில் இதுவரை ஆன்லலைன் வகுப்பு மூலமே படித்து வந்தேன். இந்த நிலையில் இன்று (அதாவது நேற்று) பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
ஆனால் கொரோனா அச்சம் காரணமாக நான் பள்ளிக்கூடத்திற்கு செல்லவில்லை. ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தினால் நன்றாக புரியும், அதிக மதிப்பெண்கள் எடுக்கலாம். ஆனால் என்னுடைய மனதில் இன்னும் கொரோனா பயம் நீங்கவில்லை. தோழிகளை நேரில் பார்க்க ஆவலாகத்தான் இருக்கிறது. என்னுடைய மனதில் கொரோனா பயம் நீங்கியதும் விரைவில் பள்ளிக்கூடத்திற்கு செல்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜெரேனியா
நான் பவானி கிரேஷ் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படிக்கிறேன். நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை பார்க்க வேண்டும் என்று காலையிலேயே எழுத்து விட்டேன்.  பின்னர் பள்ளிக்கூடத்திற்கு சென்று 10 மாதங்களுக்கு பிறகு நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
8-ம் வகுப்பு படித்தபோது ஒரு பெஞ்சுக்கு 5 அல்லது 6 மாணவர்கள் இருந்தோம். ஆனால் கொரோனா தொற்று காரணமாக தற்போது ஒரு பெஞ்சுக்கு 2 மாணவர்கள் மட்டுமே அமர்ந்து இருந்தோம். இதேபோல் மதிய உணவு சாப்பிடும் போதும் தனித்தனியாக அமர்ந்தே சாப்பிட்டோம். இது மனதுக்கு சற்று வருத்தம் அளித்தது. கொரோனா தொற்று முழுமையாக நீங்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அபி தீபதர்ஷன்
நான் ஈரோடு இந்து கல்வி நிலையத்தில் பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறேன். வழக்கமாக நடக்கும் வகுப்புகளை போல் இல்லை. சமூக இடைவெளியை கடைபிடித்து ஒரு வகுப்பறையில் 20 பேர் மட்டுமே அமர்ந்திருந்தோம். ஒரு மணிக்கு ஒருமுறை கைகளை சுத்தப்படுத்தி கொண்டோம்.
முன்னதாக பள்ளிக்கூடத்தின் நுழைவு வாயில் பகுதியிலேயே எங்களுடைய கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தி கொண்டோம். உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. முக கவசம் அணிந்து வராத மாணவர்களுக்கு முக கவசம் வழங்கினார்கள். ஆன்லைன் வகுப்புகள் சரிவர புரியவில்லை. ஆசிரியர்கள் பாடம் நடத்தியது நன்றாக புரிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜெ.தீபிகா
நான் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறேன். 10 மாதங்களுக்கு பின்னர் பள்ளிக்கூடத்திற்கு சென்றது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தது மிகுந்த சிரமமாக இருந்தது.
தற்போது தோழிகளை சந்தித்து பேசியது சந்தோஷமாக இருந்தது. சமூக இடைவெளியை பின்பற்றி, முக கவசம் அணிந்து வகுப்பறையில் அமர்ந்து பாடங்கள் கற்றது புது அனுபவமாக இருந்தது. ஆன்லைன் வகுப்புகளைவிட ஆசிரியர்கள் பாடம் நடத்தியது நன்றாக இருந்தது. எனினும் கொரோனா அச்சம் மனதில் தொடர்ந்து இருந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story