சொத்து தகராறில் அண்ணனை குத்திக்கொன்ற தம்பி


சொத்து தகராறில் அண்ணனை குத்திக்கொன்ற தம்பி
x
தினத்தந்தி 9 Feb 2021 6:13 AM IST (Updated: 9 Feb 2021 6:13 AM IST)
t-max-icont-min-icon

சொத்து தகராறில் அண்ணனை, அவரது தம்பியே கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் கொளத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்குன்றம்,

சென்னை கொளத்தூர் காமராஜர் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் பழனி (வயது 40). இவர், கொளத்தூரில் உள்ள ஒரு அச்சகத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், ரம்யா (9) என்ற மகளும், பிரபாகரன் (7) என்ற மகனும் உள்ளனர்.

இந்த வீட்டின் முதல் தளத்தில் இவரும், தரை தளத்தில் இவருடைய தம்பி தமிழ்ச்செல்வன் (38) என்பவரும் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். கட்டிடத்தொழிலாளியான தமிழ்ச்செல்வன், மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

அண்ணன்-தம்பி இருவருக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாக சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது வழக்கம்.

நேற்று மாலையும் அவர்களுக்குள் வழக்கம்போல் சொத்து தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் பழனி, வீட்டின் கீழ் தளத்தில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக வந்தார். அப்போது அவருடைய தம்பி தமிழ்ச்செல்வன், அண்ணன் என்றும் பாராமல் கத்தியால் பழனியின் கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த பழனி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பின்னர் அதே கத்தியுடன் தமிழ்ச்செல்வன் நேராக கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலையான பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், சரண் அடைந்த தமிழ்ச்செல்வனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story