மதுரை ராஜாக்கூர் அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.1.75 லட்சத்தில் வீடுகள்


மதுரை ராஜாக்கூர் அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.1.75 லட்சத்தில் வீடுகள்
x
தினத்தந்தி 9 Feb 2021 6:53 AM IST (Updated: 9 Feb 2021 6:53 AM IST)
t-max-icont-min-icon

மதுரை ராஜாக்கூர் அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.1.75 லட்சத்தில் வீடுகள் பெறலாம். அதற்காக 17-ந் தேதி வரை சிறப்பு முகாம் நடக்கிறது.

நீர்நிலை வகைப்பாடு
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மதுரை கோட்டத்தின் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் மதுரை வடக்கு தாலுகா ராஜாக்கூர் கிராமம், ராஜாக்கூர் திட்டப்பகுதி-2ல் 1,088 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
இந்த குடியிருப்பில், அரசுக்கு சொந்தமான நீர் நிலை வகைப்பாடு கொண்ட இடத்தில் குடியிருந்து வரும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மறு குடியமர்வு செய்ய முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் நகர்ப்புற வீடற்ற ஏழைகளுக்கு முன்னுரிமை அளித்து வீடுகள் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சான்றிதழ்
இந்த திட்டத்தில் ஒரு குடியிருப்புக்கான செலவு தொகையில் மத்திய-மாநில அரசுகளின் மானிய தொகை போக மீதம் பயனாளிகளின் பங்கு தொகையாக ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மட்டும் செலுத்த வேண்டும். அதோடு இங்கு குடியிருப்பை பெற இந்தியாவில் எந்த பகுதியிலும் எனக்கு வீடு இல்லை என்றும், மாத வருமானம் ரூ.25 ஆயிரத்திற்குள் கீழ் உள்ளது என்பதற்கும் சான்றிதழ் தர வேண்டும்.

அதில் பயன் அடைய விரும்பும் பயனாளிகள் குடும்ப தலைவர் மற்றும் குடும்ப தலைவி ஆகிய இருவரின் ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் கே.கே.நகர் மெயின் ரோட்டில் உள்ள குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும். அதற்காக நாளை (புதன்கிழமை) முதல் 17-ந் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதில் கலந்து கொண்டு பயன் அடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story