மேலூர் அருகே, மோட்டார்சைக்கிளில் சென்றவரை வழிமறித்த சரமாரியாக வெட்டிக் கொலை


மேலூர் அருகே, மோட்டார்சைக்கிளில் சென்றவரை வழிமறித்த சரமாரியாக வெட்டிக் கொலை
x
தினத்தந்தி 9 Feb 2021 8:59 AM IST (Updated: 9 Feb 2021 9:08 AM IST)
t-max-icont-min-icon

மேலூர் அருகே பட்டப்பகலில் மோட்டார்சைக்கிளில் சென்றவரை வழிமறித்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. மேலும் உடன் சென்ற அவரது அண்ணன் மகனுக்கும் சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டார்.

மேலூர்,

மேலூர் அருகே உள்ள கொட்டக்குடியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 45).
இவர் தனது அண்ணன் மகன் திவாகருடன் (30) மோட்டார்சைக்கிளில் கொட்டக்குடி விலக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர்களை ஒரு கும்பல் வழிமறித்தது. திடீரென அவர்கள் இருவரையும் அந்த கும்பல் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் ராமச்சந்திரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துபோனார். 

உடனிருந்த அவரது அண்ணன் மகன் திவாகர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தகவல் அறிந்ததும் மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரகுபதி ராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

ராமச்சந்திரனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த முன் விரோதத்தின் காரணமாக ராமச்சந்திரன் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் சென்று ஆய்வு செய்ததுடன் குற்றவாளிகளை விரைவாக பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

தடயவியல் துறை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story