அரசு ஊழியர்கள் சாலை மறியலில் ஓப்பாரி வைத்து நூதன போராட்டம்
திருவாரூரில் 7-வது நாளாக நடந்த அரசு ஊழியர்கள் சாலை மறியலில் ஓப்பாரி வைத்து, குறி சொல்லி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 30 பெண்கள் உள்பட 130 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர் மற்றும் தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணிபுரியும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். அரசுத்துறையில் ஆட்கள் குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டத்தை கடந்த 2-ந்தேதி அரசு ஊழியர் சங்கத்தினர் தொடங்கினர்.
இந்தநிலையில் நேற்று 7-வது நாளாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி வைத்தும், வேப்பிலை அடித்து குறி சொல்லியும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திருவாரூர் தாலுகா போலீசார் மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 130 பேரை கைது செய்தனர்.
இந்த மறியல் போராட்டத்தால் திருவாரூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story