வடுவூர் சரணாலயத்தை பார்வையிட அனுமதி
வடுவூர் சரணாலயத்தை நேற்று பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது. பறவைகள் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வடுவூர்:
வடுவூர் சரணாலயத்தை நேற்று பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது. பறவைகள் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வடுவூர் ஏரி
திருவாரூர் மாவட்டம் வடுவூரில் ஏரி 320 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இந்த ஏரியானது பறவைகள் சரணாலயமாக செயல்படுகிறது. மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் காவிரியின் கிளை ஆறுகளில் வந்தபிறகு இந்த ஏரி நிரம்புகிறது. இதனால் ஜூலை மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பி காணப்படும்.
இந்த சாதகமான சூழ்நிலையில் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை வெவ்வேறு நாடுகளில் இருந்து வரும் பறவைகள் வடுவூர் ஏரியில் தங்கி இருக்கும். பறவைகள் இனப்பெருக்கம் செய்து தங்களது குஞ்சுகளுடன் ஏப்ரல், மே மாதத்தில் வடுவூர் ஏரியில் இருந்து தங்கள் இருப்பிடம் நோக்கி பறந்து செல்லும்.
அனுமதி
இந்தநிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா கட்டுப்பாடு காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லாமல் சரணாலயம் மூடப்பட்டது. எனவே சுற்றுலாப்பயணிகள் ஏரியின் தெற்கு கரையில் நின்று பறவைகளை ரசித்து சென்றனர்.
தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக நேற்று வடுவூர் ஏரியின் கிழக்கு கரை மற்றும் வடக்கு பகுதி வரை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சரணாலயத்தில் பறவைகள் குறைவாக காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஏமாற்றம்
இதுகுறித்து சுற்றுலா பணிகள் கூறுகையில்,
வடுவூர் ஏரியில் பறவைகள் வரத்து குறைவாக காணப்படுவது, தங்களுக்கு வியப்பாக இருக்கிறது. 1 ஆண்டுக்கு பின்னர் வடுவூர் ஏரியில் தங்களை அனுமதித்துள்ள போதும் பறவைகள் இல்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளோம் என்றனர்.
Related Tags :
Next Story