திருவண்ணாமலை; ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நாளை தொடக்கம்-கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலையில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நாளை தொடங்குகிறது. முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் சந்தீப்நந்தூரி ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நாளை தொடங்குகிறது. முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் சந்தீப்நந்தூரி ஆய்வு செய்தார்.
ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்
திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
பல்வேறு துறைகளின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல் 26-ந்தேதி வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்காக ஏற்கனவே ஆன்லைன் மூலம் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பதிவு செய்து உள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் முகாமில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமும் 2 ஆயிரம் பேர்
தற்போது நிலவி வரும் கொரோனா காலத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தினமும் 2 ஆயிரம் பேர் மட்டும் அனுமதி அளிக்கப்படுவார்கள்.
மைதானத்திற்குள் அனுப்பும் போது 500 பேராக அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் நிலைப்பகுதி, காத்திருக்கும் பகுதிகளில் பிரிக்கப்பட்டு, அதிகமாக கூடாமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் முகாம் நடைபெறும் அனைத்து நாட்களும் தேவையான அடிப்படை வசதிகள் உணவு, குடிநீர், கழிவறை உள்பட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவையான டாக்டர்கள், ஆம்புலன்ஸ் வசதி, மைதானம் சுத்தப்படும் பணிகள் உள்பட அனைத்து பணிகளையும் ஒருங்கிணைப்பு மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் தங்களுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஏமாற வேண்டாம்
காவல்துறை சார்பாக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ளும் இளைஞர்கள் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.
ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் மிகவும் கண்டிப்பான முறையில் வெளிப்படையாக நடைபெறும். இதில் சிபாரிசு செய்வதற்கும், பணம் கொடுத்து வேலையில் சேருவதற்கும் வாய்ப்புகள் கிடையாது.
ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ளும் இளைஞர்களுக்கு இதுபோன்று யாராவது உங்களை அணுகினால் உடனடியாக போலீசாரிடம் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சென்னை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலக இயக்குனர் கர்னல் கவுரவ் சேத்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) சந்திரா, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் முன்னாள் கேப்டன் சீ. விஜயகுமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story