தூத்துக்குடி- கோவில்பட்டியில் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் மினி கிளினிக்குகளில் பணியில் அமர்த்த வலியுறுத்தல்


தூத்துக்குடி- கோவில்பட்டியில்  கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்  மினி கிளினிக்குகளில் பணியில் அமர்த்த வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 Feb 2021 10:34 PM IST (Updated: 9 Feb 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி, கோவில்பட்டியில், மினி கிளினிக்குகளில் தங்களை பணியில் அமர்த்தவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி, கோவில்பட்டியில், மினி கிளினிக்குகளில் தங்களை பணியில் அமர்த்தவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில், தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் பொன் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். செயலாளர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். 
கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில் மினி கிளினிக் அமைக்க துணை சுகாதார மையங்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக கைவிட வேண்டும், மினி கிளினிக்குகளில் கிராம சுகாதார செவிலியர்களை பணி அமர்த்த வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களுக்கு வீட்டு வாடகை படியை பிடிப்பதை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க வேண்டும். கிராம சுகாதார செவிலியர், பகுதி சுகாதார செவிலியர் ஆகியோரின் ஊதிய முரண்பாட்டை களைந்திட வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களை பள்ளி தடுப்பூசி பணியில் இருந்து விடுவிக்க வேண்டும், பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். இ- சஞ்சீவி மற்றும் பயோமெட்ரிக் செயலிகளை பயன்படுத்தக்கூடாது. சங்க நிர்வாகிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட வேண்டும என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் இணைச் செயலாளர் மகாலட்சுமி, துணைத்தலைவர் வெரோனிகா, துணைச் செயலாளர் தங்கம், பொருளாளர் சந்திரா, கூட்டமைப்பு தலைவர் ராஜலட்சுமி உள்பட ஏராளமான கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி
இதேபோன்று மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் கிராம சுகாதார செவிலியர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் பாப்பா தலைமை தாங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
இதில், மாவட்ட தலைவர் மகாலட்சுமி, மாவட்டச் செயலாளர் கஸ்தூரி, மாவட்ட பொருளாளர் இந்திரா, மாவட்ட துணைத்தலைவர் ரமணி பாய், மாவட்ட இணைச் செயலாளர் ரெங்கநாயகி, மாவட்ட அமைப்பு செயலாளர் நாச்சியார், மாவட்ட பிரசார பிரிவு செயலாளர் சாந்தி குட்டி மற்றும் கோவில்பட்டி சுகாதார மாவட்டத்துக்கு உட்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள், பகுதிநேர சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story