மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்


மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2021 5:09 PM GMT (Updated: 9 Feb 2021 5:09 PM GMT)

கள்ளக்குறிச்சி கலெக்டர் மற்றும் உளுந்தூர் பேட்டை தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 222 பேரை போலீசார் கைது செய்தனர்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி கலெக்டர் மற்றும் உளுந்தூர் பேட்டை தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 222 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாதாந்திர உதவித்தொகை

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். துணை தலைவர் வேலு, துணை செயலாளர் கார்த்தி, பொருளாளர் சாந்தி, குழு உறுப்பினர் அஞ்சலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள் தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்குவது போல் தமிழகத்திலும் குறைந்த பட்ச மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். அதிகமாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். 

187 பேர் கைது

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் குடியேற முயன்றனர். அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாதாமரை பாண்டியன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி 187 மாற்றுத்திறனாளிகளை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர்.

உளுந்தூர்பேட்டை

அதேபோல் உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் உமாயூன் கான், ராஜகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முன்னாள் தலைவர் பழனி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.  பின்னர் தாலுகா அலுவலகத்தில் குடியேற முயன்ற மாற்றுத்திறனாளிகள் 35 பேரை போலீசார் கைது செய்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.

Next Story