முதியவரை கொலை செய்ய முயன்ற தந்தை- மகனுக்கு 10 ஆண்டு சிறை விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு
முதியவரை கொலை செய்ய முயன்ற தந்தை- மகனுக்கு 10 ஆண்டு சிறை விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு
விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எடைக்கல் காலனியை சேர்ந்தவர் கந்தன் (வயது 67). தொழிலாளியான இவர் கடந்த 15.4.2017 அன்று அதே ஊரை சேர்ந்த குமார் என்பவரது வீட்டின் மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குமார் வீட்டின் பக்கத்து வீட்டை சேர்ந்த பாண்டியன் மற்றும் அவரது மனைவி தவமணி, மகன்கள் நமச்சிவாயம், நித்தியானந்தம் ஆகிய 4 பேர் மரத்தை வெட்டக்கூடாது என்று கந்தனிடம் தகராறில் ஈடுபட்டதோடு, ஜாதி் பெயரை சொல்லி திட்டி, அவரை கத்தியால் வெட்டினர்.
சிறை தண்டனை
இதில் பலத்த காயமடைந்த கந்தன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கந்தன் கொடுத்த புகாரின்பேரில் எடைக்கல் போலீசார் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, பாண்டியன் உள்பட 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் சிறப்பு நீதிபதி எழில் பாண்டியன் (80) மற்றும் நமச்சிவாயம் (37) ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் பாண்டியனுக்கு 5 ஆயிரம் ரூபாயும், நமச்சிவாயத்துக்கு 2 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாண்டியனின் மனைவி தவமணிக்கு (62) 5 ஆயிரம் ரூபாயும், மகன் நித்யானந்தத்துக்கு (33) 2 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story