புதுப்பேட்டை அருகே ரூ.13 கோடியில் மலட்டாறு தூர்வாரும் பணி தீவிரம்


புதுப்பேட்டை அருகே   ரூ.13 கோடியில் மலட்டாறு தூர்வாரும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 9 Feb 2021 11:04 PM IST (Updated: 9 Feb 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

புதுப்பேட்டை அருகே ரூ.13 கோடியில் மலட்டாறு தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

புதுப்பேட்டை, 
கடலூா் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள கரும்பூர், திருத்துறையூர், கட்ட முத்து பாளையம், வரிஞ்சிபாக்கம், புலவனூர் ஆகிய கிராமங்கள் வழியாக மலட்டாறு செல்கிறது. 
இப்பகுதி விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் இந்த மலட்டாறு பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதனால் விவசாய பணிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. 

ரூ.13 கோடி ஒதுக்கீடு

தற்போது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.13 கோடியில் மலட்டாறு தூர்வாரப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி இப்பணி  அரசூரில் இருந்து புலவனூர் வரையிலான 16 கிலோமீட்டர் தூரம் மேற்கொள்ளப்படுகிறது. 
இதற்கான பணிகள் விருத்தாசலம் வெள்ளாறு வடிநிலக் கோட்டம் கண்காணிப்பு பொறியாளர் மனோகர் தலைமையில், செயற்பொறியாளர் மணிமோகன் மற்றும் பொறியாளர்கள் பார்த்திபன், சிவராஜ் ஆகியோர் கண்காணிப்பில் தற்போது தொடங்கி முழுவீச்சில் நடந்து வருகிறது. இடைப்பட்ட தொலைவில் 3 இடங்களில் பாலங்கள்  கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வனத்துறை அனுமதி வேண்டும்

இதற்கிடையே, மலட்டாறு பாய்ந்தோடும்,  திருத்துறையூர் கரும்பூர், சின்ன பேட்டை ஆகிய பகுதிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு தூர்வாரும் பணியை மேற்கொள்ள வனத்துறையில் இருந்து இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. 

இதனால் இப்பணிகளில் தொய்வு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி, உடனடியாக வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும் என்பதே அந்த பகுதியை சேர்ந்தவர்களின் கோரிக்கையாக உள்ளது. 

Next Story