நெய்வேலியில் ‘கெட்' தேர்வுக்கு எதிராக தி.மு.க. ஆர்ப்பாட்டம் ரத்து செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் போராடப்போவதாக அறிவிப்பு
நெய்வேலியில்‘கெட்' தேர்வுக்கு எதிராக தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மந்தாரக்குப்பம்,
கடலூா் மாவட்டம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி) 259 ‘கெட்' (பட்டதாரி செயல் பயிற்சியாளர்) பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. கண்டனம் தெரிவித்து இருந்தது.
ஆர்ப்பாட்டம்
மேலும் என்.எல்.சி.யில் நடைபெற்றுள்ள இந்த ‘கெட்' தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், வெளிமாநில தேர்வு மையங்களில் நடைபெற்றுள்ள தேர்வில் 99 சதவீதம் வெளிமாநிலத்தவரே தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும், தமிழர்களுக்கு மற்றும் நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள், வாரிசுதாரர்களுக்கு பணி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி நேற்று ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட தி.மு.க. சார்பில், நெய்வேலி டவுன்ஷிப் 8-வது வட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, வெளிமாநிலத்தவர்களுக்கு பணி வழங்குவதில் முன்னுரிமை வழங்கும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும், தமிழகர்ளுக்கே வேலை வாய்ப்புகள் அளித்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
8 பேர் மட்டும் தேர்ச்சி
ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது:-
தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான் எல்லா துறையிலும் சாதித்து வருகிறார்கள். இன்று தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஒருவர் தான் அமெரிக்காவில் துணை அதிபராக உள்ளார்.
அப்படிப்பட்ட தமிழகத்தில் என்.எல்.சி. நடத்திய கெட் தேர்வில் 8 பேர் மட்டும் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.இதன் மூலம் தமிழர்களை மத்திய அரசு முழுவதுமாக ஒதுக்கிவிட்டு, வடமாநிலத்தவர்களை பணியமர்த்த முயற்சிக்கிறதை தான் காட்டுகிறது. இது கண்டனத்துக்கு உரியதாகும். தமிழர்களை திட்டமிட்டே புறக்கணிக்கிறீர்கள்.
கெட் தேர்வுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கத்தினரும் போராட வேண்டும். நிர்வாகம் கைவிடவில்லை என்றால் தமிழகம் முழுவதும் தி.மு.க. போராட்டத்தை முன்னெடுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சி.பி.ஐ. விசாரணை தேவை
தொடர்ந்து மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் பேசுகையில், கெட் தேர்வு விவகாரத்தில் சி.பி.ஐ. தலையிட்டு தமிழர்கள் மட்டும் ஏன் ஒதுக்கப்படுகிறார்கள் என்பதை விசாரிக்க வேண்டும்.
நிலம், உழைப்பு, பொருள் அனைத்தும் இந்த மண்ணை சேர்ந்தவர்களது. ஆனால் அதில் இருந்து பெறப்படும் லாபங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வது ஏற்கத்தக்கது அல்ல. இங்கு வரும் வருமானத்தை எங்கள் மக்களுக்கு செலவிடுங்கள்.
தமிழகத்துக்கு முன்னுரிமை
தற்போது என்.எல்.சி. நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களாக வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை பணியமர்த்தி வருகிறது. இதையும் நிர்வாகம் கைவிட வேண்டும்.
என்.எல்.சி. வேலை வாய்ப்பில் வீடு நிலம், கொடுத்தவர்களுக்கு 60 சதவீதம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். மீதம் உள்ள இடங்களை தமிழகத்தின் பிற பகுதியை சேர்ந்தவர்களுக்கு வழங்கிட வேண்டும் என்றார் அவர்.
இதில், எம்.எல்.ஏ.க்கள் நெய்வேலி சபா.ராஜேந்திரன், புவனகிரி சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, அய்யப்பன், தொ.மு.ச. பேரவை இணை செயலாளர் சுகுமார், துணை செயலாளர் வீர ராமச்சந்திரன், பொருளாளர் முகுந்தன், அலுவலக செயலாளர் பாரி, தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் செயலாளர் பொன்முடி, முன்னாள் நகர செயலாளர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராசவன்னியன் மற்றும் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொ.மு.ச. நிர்வாகிகள் என்று பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story