கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் தர்ணா
கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகாவில் வயலப்பாடி, வ.கீரனூர், வீரமாநல்லூர், கோவிந்தராஜபட்டினம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், வயலப்பாடி மற்றும் கோவிந்தராஜபட்டினம் பகுதிகளில் உள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக டெட்டனேட்டர் வைத்து பாறைகளை வெட்டி எடுப்பதால் வயலப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள குடியிருப்புகள் சேதமடைகின்றன. அவ்வப்போது நில அதிர்வும் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் குழந்தைகள், முதியவர்கள் தூக்கமின்றி பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். நீர்நிலைகள், காற்று ஆகியவை மாசடைந்து சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதால், பலருக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. மேலும், அதிக சுமை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இதில் இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அலுலர்களிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை மூட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக, தெரிவித்தனர். இதையடுத்து அவர்களிடம், போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து, தர்ணா போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு ராஜேந்திரனிடம் கோரிக்கை மனுவை அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story