போலி ஆவணம் மூலம் சோப்பு கம்பெனி; டாக்டர், மனைவி மீது போலீசார் வழக்கு


web photo
x
web photo
தினத்தந்தி 10 Feb 2021 1:04 AM IST (Updated: 10 Feb 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெற்ற அரசு அதிகாரியை ஏமாற்றி போலி ஆவணம் மூலம் சோப்பு கம்பெனி நடத்தி வந்த டாக்டர், அவரது மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்சி
ஓய்வு பெற்ற அதிகாரி
சென்னை திருவேற்காடு சிவன் கோவில் ரோட்டை சேர்ந்தவர் சோமையா (வயது 65). இவர், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவருக்கு சொந்தமான வீடு, திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ்.காலனி ஜெயா நகரில் உள்ளது. 
இந்த வீட்டை சென்னை திருவேற்காடு அம்மன் கோவில் தெருவை சேர்ந்த டாக்டர் மாரிமுத்து என்பவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் ரூ.18 ஆயிரத்திற்கு மாத வாடகை அடிப்படையில் ஒப்பந்தம் போட்டு கொடுத்தார். அதற்காக முன்தொகையாக ரூ.1 லட்சமும் சோமையா பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
தற்போது டாக்டர் மாரிமுத்து, அவரது மனைவி வீரஜோதி ஆகியோர் திருச்சி ஆர்.எம்.எஸ்.காலனி ஜெயாநகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள்.
சோப்பு கம்பெனி
இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் சோமையாவுக்கு தெரியாமல், அவரை ஏமாற்றும் விதத்தில் டாக்டர் மாரிமுத்து, கடந்த 10.10.2016 அன்று தேதியிட்ட போலியான ஆவணங்கள் மூலம் ஒப்பந்தம் தயாரித்து ‘நலம் கேர் எம்.ஏ. கிளினிக்’ என்ற பெயரில் கிளினிக் நடத்தி வந்துள்ளார். கிளினிக் நடத்திட, சென்னை மருந்து உரிமம் இயக்குனர் அலுவகத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 28-ந் தேதி உரிமம் பெற்றுள்ளார்.
மேலும் முறையாக மாதந்தோறும் வாடகையும் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதையறிந்த சோமையா, வீட்டை காலி செய்யும்படி தொடர்ந்து அறிவுறுத்தி வந்துள்ளார். ஆனால், டாக்டர் மாரிமுத்து, வீட்டை காலி செய்யாமல், கிளினிக்கை எடுத்து விட்டு, அதே வீட்டின் முகவரியில் புதிதாக சோப்பு கம்பெனி ஒன்றை நடத்தி வந்துள்ளார். மேலும் சோமையாவின் கையெழுத்தைபோல போலியாக போட்டு, வீட்டுக்கான மின் இணைப்பை மின்வாரிய அலுவலகத்தில் அதை வணிக மின் இணைப்பாகவும் டாக்டர் மாரிமுத்து மாற்றி இருக்கிறார்.
டாக்டர், மனைவி மீது வழக்கு
இதுகுறித்து சோமையா, திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டியிடம் புகார் கொடுத்தார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசுக்கு துணை கமிஷனர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமார் விசாரணை நடத்தி, டாக்டர் மாரிமுத்து மற்றும் அவரது மனைவி வீரஜோதி மீது இந்திய தண்டனை சட்டம் 406, 420, 468 மற்றும் 471 ஆகிய 4 சட்டப்பிரிவுகளின் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story