நெல்லை மாவட்டத்தில் கூடுதலாக 536 வாக்குச்சாவடிகள்
நெல்லை மாவட்டத்தில் கூடுதலாக 536 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன என்று கலெக்டர் விஷ்ணு கூறினார்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கூடுதலாக 536 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன என்று கலெக்டர் விஷ்ணு கூறினார்.
ஆலோசனை கூட்டம்
நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு கலெக்டர் விஷ்ணு தலைைம தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
1,000 வாக்காளர்கள்
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 1,500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்று இருந்ததை, 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்று மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் 5 சட்டசபை தொகுதிகளில் அந்தந்த பகுதி வாக்குப்பதிவு அலுவலர், உதவி வாக்குப்பதிவு அலுவலர்கள் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து வாக்குச்சாவடிகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன.
536 கூடுதல் வாக்குச்சாவடிகள்
அதன்படி, நெல்லை தொகுதியில் 308 வாக்குச்சாவடிகளுடன் கூடுதலாக 120 சேர்த்து மொத்தம் 428 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
அம்பை தொகுதியில் 294 வாக்குச்சாவடிகளுடன் கூடுதலாக 71 சேர்த்து மொத்தம் 365 வாக்குச்சாவடிகளும், பாளையங்கோட்டை தொகுதியில் 268 வாக்குச்சாவடிகளுடன் கூடுதலாக 145 சேர்த்து ெமாத்தம் 413 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச்சாவடிகளுடன் கூடுதலாக 112 சேர்த்து மொத்தம் 411 வாக்குச்சாவடிகளும், ராதாபுரம் தொகுதியில் 306 வாக்குச்சாவடிகளுடன் கூடுதலாக 88 சேர்த்து 394 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. ஆக மொத்தம் நெல்லை மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் ஏற்கனவே இருந்த 1,475 வாக்குச்சாவடிகளுடன் கூடுதலாக 536 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 2,011 வாக்குச்சாவடிகளில் தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்படும். இதற்கான ஒப்புதல் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
ஓட்டுப்பதிவு எந்திரங்கள்
நெல்லை மாவட்டத்தில் தேர்தல் நடத்துவதற்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் வி.வி.பாட் எந்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு கலெக்டர் விஷ்ணு கூறினார்.
கூட்டத்தில் அதிகாரிகள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story