கடலூாில் வேலைவாய்ப்பு அலுவலக பெண் ஊழியரிடம் செல்போன் திருடிய வாலிபா் கைது
கடலூாில் வேலைவாய்ப்பு அலுவலக பெண் ஊழியரிடம் செல்போன் திருடிய வாலிபரை போலீசாா் கைது செய்தனா்.
கடலூர்,
குறிஞ்சிப்பாடி பாட்டைத்தெருவை சேர்ந்தவர் கமலநாதன். இவருடைய மனைவி கலைச்செல்வி (வயது 39). கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இவர் பணியில் இருந்த போது, புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் கோகிலாம்பாள் நகரை சேர்ந்த தங்கராசு மகன் ராஜீவ்காந்தி (35) என்பவர் தனது வேலைவாய்ப்பு அலுவலக அட்டையை பதிவு செய்வதற்காக வந்தார். பின்னர் அவர் பதிவு செய்து விட்டு சென்று விட்டார். அவர் சென்ற சிறிது நேரத்தில் கலைச்செல்வி மேஜையில் வைத்திருந்த அவரது செல்போனை காணவில்லை.
இது பற்றி அவர் உடனடியாக கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜீவ்காந்தி வந்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரது விலாசத்தில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது, அவர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நின்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது, அவர் கலைச்செல்வி செல்போனை திருடி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story