சாலையில் படுத்து அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம்


சாலையில் படுத்து அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2021 1:42 AM IST (Updated: 10 Feb 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் 8-வது நாளாக நேற்று அரசு ஊழியர்கள் சாலையில் படுத்து மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 65 பெண்கள் உள்பட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 8-வது நாளாக நேற்று காலை தஞ்சை மணிமண்டபம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் கோதண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரெங்கசாமி முன்னிலை வகித்தார். முன்னாள் மாநில செயலாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் அரசு ஊழியர்கள் பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பியபடி அரசு தொழிற்பயிற்சி நிலைய மைதானம் அருகே இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்து மணிமண்டபம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்களில் சிலர் சாலையில் படுத்துக்கொண்டே கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

ரத்து செய்ய வேண்டும் 

மறியல் போராட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும். கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு இறந்த அரசு ஊழியர்களுக்கு ரூ.50 லட்சமும், நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்க வேண்டும். அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த மறியல் போராட்டத்தினால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் கைது செய்து மினிபஸ்சில் ஏற்றி சென்றனர். மொத்தம் 65 பெண்கள் உள்பட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story