விருத்தாசலத்தில் தாறுமாறாக ஓடிய லாரி மோதி 2 தொழிலாளர்கள் பலி
விருத்தாசலத்தில் தாறுமாறாக ஓடிய லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
விருத்தாசலம்:
பண்ருட்டி அருகே உள்ள கீழ்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் மணிசேகரன் (வயது 40), கிருஷ்ணமூர்த்தி (45). கட்டிட தொழிலாளர்கள். இவர்கள் விருத்தாசலத்தில் கட்டிட வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
விருத்தாசலம் ஆலடி ரோட்டில் ஆதிதிராவிடர் அரசு கல்லூரி மாணவர் விடுதி அருகே வந்த போது, அவர்களுக்கு முன்னால் விருத்தாசலம் பெரிய கண்டியங்குப்பத்தை சேர்ந்த முருகேசன் மகன் மணிவாசகன் (30) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
தறிகெட்டு ஓடிய லாரி
அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மணிவாசகன் மீது மோதியது. மேலும் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி தறிகெட்டு ஓடி மணிசேகரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சென்ற மோட்டார் சைக்கிள் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் மணிசேகரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மணிசேகரன் பரிதாபமாக இறந்தார்.
டிரைவர் கைது
மேலும் கிருஷ்ணமூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனிடையே விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை பொதுமக்கள் வாகனங்களில் துரத்திச் சென்று மறித்து, டிரைவரை மடக்கி பிடித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசாரிடம் லாரி டிரைவரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். பின்னர் லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் விருத்தாசலம் பாலக்கொல்லை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் விஜி (35) என்பது தெரிந்தது.
பின்னர் விபத்து தொடர்பாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். விபத்தில் மணிவாசகன் சிறுகாயத்துடன் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story