நெல்லை, தென்காசியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை:
மாதாந்திர உதவித்தொைகயை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குடியேறும் போராட்டம்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், நேற்று அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடத்தப்பட்டது. நெல்லையில் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர்.
அதாவது, தெலுங்கானா, புதுச்சேரிகளில் இருப்பது போல் மாத உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்டப்படி தனியார் துறைகளில் 5 சதவீதம் பணி வாய்ப்புகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு நெல்லை மாவட்ட துணை தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் குமாரசுவாமி, நிர்வாகிகள் மெய்யாசாமி, சங்கரசுப்பு, கன்னிமரியாள், மணிகண்டன், சுமா, அந்தோணி ஆபிரகாம், நடராஜன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
சாலை மறியல்
அவர்களை போலீசார் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து கொக்கிரகுளம் மெயின் ரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் வேனில் அழைத்துச்சென்று வண்ணார்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தங்க வைத்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மாநகராட்சி பள்ளியில் அடிப்படை வசதி இல்லை என்று கூறி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளை தங்க வைத்தனர். மாலை 5 மணிக்கு அவர்களை போலீசார் விடுதலை செய்தனர். விடுதலை செய்யப்பட்டவர்கள் வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகே மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சங்க தலைவர் தியாகராஜன் கூறுகையில், “எங்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் வரை மறியல் போராட்டத்தை கைவிட மாட்டோம்” என்றார் இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் அவர்களை மீண்டும் கைது செய்து பாளையங்கோட்டை உள்ள ஒரு தனியார் பள்ளியில் தங்கவைத்தார். 7 பெண்கள் உட்பட 38 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் இசக்கி தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் முத்துக்குமாரசாமி முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. லெனின்குமார், விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கணபதி ஆகியோர் பேசினார்கள். காது கேளாதோர் சங்க மாவட்ட செயலாளர் முகமது லத்தீப், உதவித்தலைவர் ஏசுதாசன் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் சேரன்மாதேவி, அம்பை, ராதாபுரம், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளிலும் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Related Tags :
Next Story