கோவைப்புதூரில் 32 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து நினைவுகளை பகிர்ந்து கொண்ட சப் இன்ஸ்பெக்டர்கள்
கோவைப்புதூரில் பயிற்சி பெற்ற சப் இன்ஸ்பெக்டர்கள் 32 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
கோவை
சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திப்பு
கோவைப்புதூர் போலீஸ் பயிற்சி பள்ளியில் கடந்த 1988-ம் ஆண்டு 250 போலீசார் 6 மாதம் பயிற்சி பெற்றனர். அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றனர்.
இதில் பலர் கோவையில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள், அவ்வப் போது தொலைபேசி, செல்போன் மூலம் பேசி தொடர்பில் இருந்தனர். அவர்கள், செல்போனில் கோவை கில்லீஸ் என்ற பெயரில் வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கினர்.
அதில் ஒவ்வொருவராக இணைந்து நண்பர்களையும் இணைத்தனர். அதில், தாங்கள் பணியாற்றும் இடம், குடும்பம், பணிச்சூழல் உள்ளிட்ட தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள், கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் பயிற்சி பெற்ற கோவைப்புதூர் போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் சந்திக்க முடிவு செய்தனர்.
ஒன்று கூடினர்
அதன்படி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பணியாற்றும் சப்-இ்ன்ஸ்பெக்டர்கள் நேற்றுமுன்தினம் கோவைப்புதூர் பயிற்சி பள்ளி மைதானத்தில் ஒன்று கூடினர்.
இதில் பலரின் தோற்றம் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருந்தது. ஆனாலும் நட்பின் காரணமாக அவர்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கட்டித்தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர்.
மேலும் போலீஸ் பயிற்சி பெற்ற காலத்தில் நடந்த சுவையான மறக்க முடியாத சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். அப்போது பாட்டுப்பாடி, நடனம் ஆடினர்.
இதையடுத்து அவர்கள் தாங்கள் பயிற்சி பெற்ற மைதானத்தில் வலம் வந்து பழம், தேங்காய் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். அங்குள்ள காவலர் நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நினைவுப்பரிசு
இதைத்தொடர்ந்து அவர்கள், தங்களுக்கு பயிற்சி அளித்த ஓய்வு பெற்ற 7 பயிற்சியாளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினர். பெரியநாயக்கன் பாளையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்து உயிரிழந்த பால் அலெக்சாண்டரின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கினர்.
இது குறித்து உக்கடம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர் கூறும்போது, 1988-ம் ஆண்டு 250 பேர் பயிற்சி பெற்றோம். இதில்,20 பேர் ஓய்வு பெற்று விட்டனர். 27 பேர் இறந்துவிட்டனர். 114 சப்-இன்ஸ்பெக் டர்கள் மட்டும் கலந்து கொண்டு நினைவுகளை பகிர்ந்து கொண்டோம்.
நீண்டநாட்களுக்கு பிறகு இளமைக்கால நண்பர்களை சந்தித்தது மகிழ்ச்சியையும், புதிய உற்சாகத்தையும் அளித்தது என்றார்.
Related Tags :
Next Story