என்எல்சியில் வெளிப்படை தன்மையுடனே வேலைவாய்ப்பு தேர்வுகள் நடைபெற்றுள்ளது- என்எல்சி நிா்வாகம்
என்எல்சியில் வெளிப்படை தன்மையுடனே வேலைவாய்ப்பு தேர்வுகள் நடைபெற்றுள்ளது. இதில் யாரையும் குறிப்பிட்டு புறக்கணிக்கவில்லை என்று நிர்வாகத்தினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
நெய்வேலி
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பட்டதாரிகள் நிர்வாக பயிற்சியாளர்கள் பணிக்காக நடந்த தேர்வில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டினர். மேலும் தற்போது நடந்த தேர்வை ரத்து செய்வதுடன், இது குறித்து விசாரணை நடத்திட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று என்.எல்.சி. நிர்வாக இயக்குனர் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியானது.
அதில் கூறியிருப்பதாவது:-
259 பணியிடங்கள்
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் விரிவாக்க பணியில் புதிய திட்டமாக உத்தரபிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் நெய்வேலியில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் பணி நடைபெறுகிறது. இதில் 259 பட்டதாரி நிர்வாக பயிற்சியாளர் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.
எஸ்.சி., எஸ்.டி, ஓ.பி.சி., இ.டப்ள்யூ.எஸ். உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு நடைபெறும் என்றும், பணியிட விவரங்கள் குறித்து நாடுமுழுவதும் முன்னணி செய்திதாள்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டது. இத்தேர்வை பொதுத்துறை நிறுவனமான இந்திய கல்வி ஆலோசனை நிறுவனம் நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டது.
261 தேர்வு மையங்கள்
இத்தேர்வை எழுத 1 லட்சத்து 11 ஆயிரத்து 59 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 59 ஆயிரத்து 545 பேர் ஆன்லைன் தேர்வை 17-11-2020, 24-11-2020, 25-11-2020 மற்றும் 27-12-2020 ஆகிய நாட்களில் எழுதினர். இதற்காக நாடு முழுவதும் 105 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு 261 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது.
கண்காணிப்பு
தேர்வு மையங்கள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டது. மேலும் செல்போன்கள் பயன்படுத்த முடியாத வகையில் ஜாமர் கருவிகளும் அமைக்கப்பட்டதுடன், ஆள்மாறட்டம் ஏதேனும் நடைபெறாமல் இருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவை அனைத்தையும் என்.எல்.சி.யின் மூத்த நிர்வாகிகள் அடங்கிய வழிகாட்டு குழுவினர் கண்காணித்தனர்.
தேர்வு முடிந்த பின்னர், தேர்வாளர்கள் அனைவரும் விடைத்தாள்கள் ஆன்லைன் மூலம் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலமாக அவர்கள் விடைத்தாள்களை சரிபார்த்துக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
அனைத்து விதிகளும் பின்பற்றப்பட்டது
இறுதி மதிப்பெண்கள் விவரம் தேர்வாளர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் நேர்முக தேர்வுக்கான பட்டியல் வெளியிட்டு 1:6 என்கிற (ஒரு பதவிக்கு 6 பேர் என்கிற அடிப்படையில்) விகிதத்தில் அனைத்து இட ஒதுக்கீட்டு விதிகளை பின்பற்றியே மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான விவரங்கள் என்.எல்.சி.யின் அதிகார பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
யாருக்கும் சாதகம் இல்லை
இந்த நிலையில் பணிநிரப்புதல் நிகழ்வில் தவறுகள், குளறுபடிகள் நடந்துள்ளது, ஒரு குறிப்பிட்ட மாநிலம் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
என்.எல்.சி.யை பொறுத்தவரை, நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு இந்திய அளவில் திறந்த நிலையில் தேர்வுகள் நடத்தப்படும். ஆனால், நிர்வாக அதிகாரி பணியிடங்களை தவிர்த்து பிற பணிகளுக்கு அந்தந்த பகுதி பணியாட்களை கொண்டே நிரப்பப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
என்.எல்.சி. வேலைவாய்ப்பு பணியில் வெளிப்படைத்தன்மை, உறுதி தன்மை மற்றும் நேர்மை என்பதை தான் கொள்கையாக கொண்டு செயல்பட்டு உறுதி செய்துள்ளது. தேர்வு, நேர்காணலுக்கான பட்டியல் எந்த ஒருவருக்கும் சாதகமாக இருப்பதற்க்கு வாய்ப்புகளே இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story