சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்
சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்தினார்கள்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டம்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே குடியேறும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு ரத்தினம் தலைமை தாங்கினார்.
40 சதவீத உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தெலுங்கானா, கேரளா, புதுச்சேரியில் வழங்குவதுபோல் மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், தனியார்துறை வேலைவாய்ப்பில் 5 சதவீதபணி ஒதுக்கீடு வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்ப அட்டைகளை முன்னுரிமை அட்டைகளாக அறிவித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேட்டூர்
இதேபோல் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு மேட்டூர் நகரம் மற்றும் கொளத்தூர் ஒன்றிய அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட தலைவர் அம்மாசி போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதையடுத்து நேற்று உதவி கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சமரச உடன்பாடு ஏற்படாததால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மாற்றுத்திறனாளிகளை கைது செய்தனர். இந்த போராட்டத்தில் மேட்டூர் நகர பொறுப்பாளர் சரவணன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளும் மேட்டூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
சங்ககிரி
சங்ககிரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குடியிருப்பு போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். ஆனால் போலீசார் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நுழையவிடாமல் தடுத்தனர்.
இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் திடீரென திருச்செங்கோடு மெயின் ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மாவட்ட தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்ட 77 ஆண்கள், 20 பெண்கள் கைது செய்யப்பட்டு சங்ககிரியில் தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story