திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித் திருவிழாவையொட்டி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பூச்சொரிதல் விழா நடக்கிறது
திண்டுக்கல்:
மாசித்திருவிழா
திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் மாசித்திருவிழா நாளை (வியாழக்கிழமை) பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்படுகிறது.
இதையடுத்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பூச்சொரிதல் விழா, 14-ந்தேதி சாமி சாட்டுதல், 16-ந்தேதி திருவிழா கொடியேற்றம், 27-ந்தேதி தசாவதார நிகழ்ச்சியும், அடுத்த மாதம் (மார்ச்) 1-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு கொடியிறக்கம், 2-ந்தேதி தெப்ப உற்சவம் ஆகியவை நடைபெறுகிறது.
பூச்சொரிதல்
இதில் நாளை மறுநாள் ஸ்ரீஐயப்பன் பூச்சொரிதல் குழு சார்பில் பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. இதையொட்டி காலை 10 மணிக்கு பூத்தேர் வீதிஉலா தொடங்குகிறது.
அப்போது பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் கோட்டை மாரியம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். பின்னர் கோவிலில் இருந்து தொடங்கும் பூத்தேர் வீதிஉலா மேற்கு ரதவீதி, பென்சனர்தெரு, கோபாலசமுத்திரம் மேற்கு கரை, சத்திரம் தெரு, கிழக்கு ரதவீதி, தெற்கு ரதவீதி வழியாக வலம் வந்து கோவிலை வந்தடைகிறது.
இந்த பூத்தேர் வீதிஉலாவின் போது பக்தர்கள், பூக்களை காணிக்கையாக செலுத்துவார்கள். அந்த பூக்களை கொண்டு கோட்டை மாரியம்மனுக்கு பூஜைகள் நடத்தப்படும்.
அதன்பின்னர் மாலையில் பூத்தேர் வீதிஉலா தொடங்கி தாலுகா அலுவலக சாலை, பழனி சாலை வழியாக ஸ்ரீதுர்க்கை பூஜை மண்டபத்தை சென்றடைகிறது.
Related Tags :
Next Story