சித்தா, ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய எதிர்ப்பு: சேலத்தில் மருத்துவ சங்கத்தினர் உண்ணாவிரதம்
சித்தா, ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் இந்திய மருத்துவ சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்:
சித்தா, ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் இந்திய மருத்துவ சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரத போராட்டம்
சித்தா, ஆயுர்வேத டாக்டர்கள் அலோபதி டாக்டர்கள் போல் 58 விதமான அறுவை சிகிச்சைகள் செய்யலாம் என்று மத்திய அரசு சட்ட வரைவு கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக மருத்துவ சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் 5 ரோட்டில் உள்ள இந்திய மருத்துவ சங்க வளாகத்தில் நேற்று இந்திய மருத்துவ சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மருத்துவ சங்கத்தின் சேலம் மண்டல துணைத்தலைவர் மல்லிகா தலைமை தாங்கினார்.
கலப்பட மருத்துவம் வேண்டாம்
போராட்டத்தில் கலந்து கொண்ட டாக்டர்கள் பலர், கலப்பட மருத்துவம் வேண்டாம், ஏழை, எளிய மக்களின் உயிரோடு விளையாடாதே என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி இருந்தனர்.
உண்ணாவிரதம் குறித்து சங்கத்தின் சேலம் மண்டல துணைத்தலைவர் மல்லிகா கூறும் போது, ‘கலப்பட மருத்துவத்தால் பொதுமக்கள் எதிர்காலத்தில் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாக நேரிடும். இதனால் மத்திய அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்து கலப்பட மருத்துவ முறையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் 38 ஆயிரத்துக்கு மேற்பட்ட டாக்டர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்’ என்றார்.
Related Tags :
Next Story