சேலம் ஜங்ஷனில் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல்
ரெயிலில் கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்க நகைகள் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூரமங்கலம்:
ரெயிலில் கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்க நகைகள் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வட மாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம் ஜங்ஷன்
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வழியாக தினமும் 50-க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்று வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக, ரெயில்களில் செல்ல முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும் ரெயில்களில் திருட்டு ஏதும் நடந்து விடாமல் தடுக்க சேலம் ஜங்ஷனில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
3 கிலோ தங்கம்
இதுபோல சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று பகலில் ரெயில்வே பாதுகாப்பு படை சேலம் இன்ஸ்பெக்டர் அரவிந்த் குமார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னையில் இருந்து கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அதில் வந்த 2 வாலிபர்கள் ரெயில் பெட்டியில் இருந்து கீழே இறங்கி பேசிக்கொண்டிருந்தனர். அவர்களது கைகளில் கைப்பை வைத்திருந்தனர். இவர்களின் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் 2 பேரையும் அழைத்து விசாரித்தனர். அப்போது இந்தியில் இருவரும் பேசினர். எங்கு செல்கிறீர்கள்? என்ன கொண்டு செல்கிறீர்கள்? என கேட்டதற்கு சரியாக பதில் கூறாததால் இருவரிடம் இருந்த கைப்பையை வாங்கி சோதனையிட்டனர். இதில் 3 கிலோ தங்க நகைகள் இருந்தன.
கைது
இவை அனைத்தும் பெண்கள் கழுத்தில் அணியும் செயின் ஆகும். இதன் மதிப்பு ரூ.1 கோடியே 41 லட்சம் ஆகும். இவர்களிடம் தங்க நகைகள் எடுத்துச் செல்ல ரசீதோ அல்லது வேறு எந்த ஆவணங்களோ இல்லை. மேலும் நகைகள் பற்றி கேட்டதற்கு சரியான விளக்கம் தரவில்லை. முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.
இதையடுத்து ரெயிலில் நகைகளை கடத்தி வந்த 2 பேரையும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த சிவராஜ் (வயது 22), பாகிராத் (30) என தெரியவந்தது. ரெயிலில் நகைகள் கொண்டு வந்து கைதான 2 பேர் குறித்து சேலம் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story