தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியால் எந்தவித பக்கவிளைவும் ஏற்படவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்


தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியால் எந்தவித பக்கவிளைவும் ஏற்படவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 10 Feb 2021 7:09 AM IST (Updated: 10 Feb 2021 7:11 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியால் எந்தவித பக்க விளைவும் ஏற்படவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் நேற்று கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
அதன்பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள சுகாதார முன் களப் பணியாளர்களுக்கு ஏற்கனவே கோவிட் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்பொழுது போலீஸ் மற்றும் வருவாய்த்துறையைச் சார்ந்த முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

நேற்று வரை தமிழகத்தில் 1 லட்சத்து 74 ஆயிரத்து749 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சராசரியாக தினமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.  
இதே போன்று பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்து நம்பிக்கையூட்டும் வகையில் இவர்கள் தடுப்பூசியை போட்டுக்கொண்டது மிகவும் பாராட்டுக்குரியது.

தமிழகத்திற்கு இதுவரை 12 லட்சத்து 34 ஆயிரம் எண்ணிக்கையில் கொரோனா தடுப்பு மருந்துகள் வந்துள்ளது. இதேபோன்று இன்னும் கூடுதலாக மருந்துகள் மத்திய அரசிடமிருந்து வர உள்ளது. சுகாதாரத்துறை முன்களப் பணியாளர்களுக்கு இன்னும் ஓரிரு நாட்கள் மட்டும் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. எனவே சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் விடுபடாமல் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு இயற்கையாகவே புதிதாக தடுப்பூசி வரும் போது சிறிது தயக்கம் இருப்பது உண்மைதான். 

இந்தக் காரணத்தினால் தான் சுகாதாரத்துறையின் சார்பில் நான் தடுப்பூசி எடுத்துக் கொண்டேன். தமிழகத்தில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளோ, பக்க விளைவுகளோ ஏற்படவில்லை. எனவே பொது மக்கள் அனைவரும் எந்தவிதமான தயக்கமோ, பயமோ இன்றி தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம். மேலும் கொரோனா தடுப்பூசி குறித்து தவறான வதந்திகள் பரப்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story