திருத்தணியில் பயங்கரம்: மகனை வெட்டிக்கொன்ற தந்தை - வேலைக்கு செல்லாமல் தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரம்


திருத்தணியில் பயங்கரம்: மகனை வெட்டிக்கொன்ற தந்தை - வேலைக்கு செல்லாமல் தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரம்
x
தினத்தந்தி 10 Feb 2021 4:15 AM GMT (Updated: 10 Feb 2021 4:15 AM GMT)

திருத்தணியில் வேலைக்கு செல்லாமல் தகராறில் ஈடுபட்டதால் தந்தை தனது மகனை வெட்டிக்கொன்றார்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரெட்டி குளம் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 50). இவர் திருத்தணி காமராஜர் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது முதல் மனைவி செல்வி. இவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்து சென்றுவிட்டார். முதல் மனைவிக்கு கீர்த்தனா (22), மோனிஷா (20) என்ற 2 மகள்களும், கோகுல் (18) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் பழனி தனது உறவுப்பெண்ணை 2-வது திருமணம் செய்துகொண்டார். 2-வது மனைவிக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் முதல் மனைவியின் மகனான கோகுல் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர்சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கோகுலுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் இவர் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தனது தந்தையை அடிக்கடி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தந்தை, மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை குடிபோதையில் இருந்த கோகுல் மார்க்கெட் பகுதியில் காய்கறி கடையில் இருந்த தனது தந்தையிடம் வந்து பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தந்தை, மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தந்தை பழனி தனது மகன் கோகுலை கல்லால் முகத்தில் தாக்கினார். பின்னர் வாழை இலை வெட்டும் கத்தியால் சரமாரியாக வயிற்றில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த கோகுல் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து பழனி நேராக திருத்தணி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். மகனை கொலை செய்துவிட்டு தந்தையே போலீசில் சரண் அடைந்ததை கண்டு போலீசார் திகைத்தனர்.

Next Story