மதுராந்தகம் அருகே பயங்கர விபத்து: லாரி-கார் மோதல்; 5 பேர் பலி - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்த பரிதாபம்
மதுராந்தகம் அருகே லாரி-கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் பலியானார்கள்.
மதுராந்தகம்,
சென்னை பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 80). இவர், சுகாதாரத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருடைய மனைவி இந்திராணி (75). இவர்களுடைய மகள் மகாலட்சுமி (50). இவர், தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். மகாலட்சுமியின் மகள் சாந்தினி (18). இவர். கல்லூரியில் படித்து வந்தார்.
இவர்கள் 4 பேரும் தங்கள் சொந்த காரில் சென்னையில் இருந்து திருச்சியை அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். சென்னை மாங்காடை சேர்ந்த பால் தினகரன் (24) கார் டிரைவராக இருந்தார்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அத்திமானம் என்ற இடத்தில் கார் வந்தபோது, முன்னால் சென்ற லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி, லாரியின் பின்பகுதியில் செருகி கொண்டது. அதிகாலையில் அந்த லாரியை, கன்டெய்னர் லாரிகள் நிறுத்தி வைத்திருக்கும் இடத்தில் இருந்து பைபாஸ் சாலைக்கு ஓட்டி வந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் காரில் வந்த சுப்பிரமணி, இந்திராணி, மகாலட்சுமி, சாந்தினி மற்றும் கார் டிரைவர் பால் தினகரன் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி தகவலறிந்த செங்கல்பட்டு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆதேஷ்பஞ்சாரா, படாளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் டில்லி பாபு ஆகியோர் விரைந்து சென்று அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான மணப்பாறையை சேர்ந்த தங்கசாமி (31) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அவர்களது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story