வீட்டில் தனியாக இருந்தவர் இறந்த வழக்கில் திருப்பம்: ரூ.10 லட்சத்துக்காக மாற்றுத்திறனாளியை கொன்றது அம்பலம் - நண்பர் கைது


வீட்டில் தனியாக இருந்தவர் இறந்த வழக்கில் திருப்பம்: ரூ.10 லட்சத்துக்காக மாற்றுத்திறனாளியை கொன்றது அம்பலம் - நண்பர் கைது
x
தினத்தந்தி 10 Feb 2021 6:46 AM GMT (Updated: 10 Feb 2021 6:46 AM GMT)

வீட்டில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி என்ஜினீயர் திடீரென இறந்த வழக்கில், ரூ.10 லட்சத்துக்காக அவரது நண்பரே தலையணையால் அமுக்கி கொலை செய்தது தெரிந்தது. நண்பரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் அச்சுதன் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 32). இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆகும். மாற்றுத்திறனாளி என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவருடன் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகசாமி (30) என்பவரும் தங்கி பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் தான் டீ வாங்க கடைக்கு சென்றிருந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த விக்னேஷ், திடீரென இறந்து கிடப்பதாக கிண்டி போலீசில் ஆறுமுகசாமி புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார், விக்னேஷின் உடலை கைப்பற்றி, சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து ஆறுமுகசாமியிடம் விசாரணை நடத்தினர்.

அதில் மாற்றுத்திறனாளியான விக்னேசுக்கு ஏற்கனவே இருதய கோளாறு இருந்து வந்ததாகவும், இதற்காக பல மாதங்களாக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதனால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் எனவும் கூறினார்.

ஆனால் ஆறுமுகசாமி கூறிய தகவலால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.

விக்னேஷின் வங்கி கணக்கில் ரூ.10 லட்சம் வரை இருந்துள்ளது. அதனை அபகரிக்க ஆறுமுகசாமி திட்டமிட்டார். சமீபத்தில் இதய பிரச்சினை காரணமாக விக்னேஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதை பயன்படுத்தி விக்னேசை கொலை செய்ய முடிவு செய்து, தனது நண்பரான சிவகாசியை சேர்ந்த நாராயணனை சென்னைக்கு வரவழைத்தார். பின்னர் விக்னேஷ் தூங்கி கொண்டு இருக்கும்போது நண்பருடன் சேர்ந்து ஆறுமுகசாமி தலையணையால் விக்னேசின் முகத்தில் அமுக்கி அவரை கொலை செய்தார்.

பின்னர் இதய பிரச்சினை காரணமாக விக்னேஷ் இறந்ததாக போலீசாரிடம் நாடகமாடியதாக போலீசாரிடம் தெரிவித்தார். எனினும் விக்னேஷின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் சிவகாசிக்கு தப்பி சென்ற நாராயணனை பிடிக்க தனிப்படை அங்கு விரைந்து உள்ளது. ரூ.10 லட்சத்துக்காக நண்பரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story