திருவண்ணாமலை; ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் தொடங்கியது


திருவண்ணாமலை; ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் தொடங்கியது
x
தினத்தந்தி 10 Feb 2021 9:22 PM IST (Updated: 10 Feb 2021 9:22 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் தொடங்கியது. வருகிற 26-ந்தேதி வரை நடக்கிறது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் தொடங்கியது. வருகிற 26-ந்தேதி வரை நடக்கிறது. 

ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்
சென்னை மண்டல ராணுவ தலைமை அலுவலகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்திய ராணுவத்திற்கான நேரடி ஆள்சேர்ப்பு முகாம் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. 

இந்த முகாமானது வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. இதில் திருவண்ணாமலை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சென்னை உள்பட 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கின்றனர். 

முகாமில் சிப்பாய் தொழில்நுட்பம், சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் நர்சிங் உதவியாளர் கால்நடை, சிப்பாய் எழுத்தர், ஸ்டோர் கீப்பர் மற்றும் சிப்பாய் வர்த்தகர் ஆகிய பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.

உடல் தகுதி தேர்வு

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்துவதாக திட்டமிட்டிருந்த இம்முகாம் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டு நேற்று தொடங்கப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி சீட்டு ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டது. 

இதில் கொரோனா விதிமுறைகள் காரணமாக தினமும் 2 ஆயிரம் பேர் மட்டும் தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதையொட்டி நேற்று முன்தினம் இரவே ஏராளமான இளைஞர்கள் திருவண்ணாமலைக்கு வந்தனர். இவர்கள் நள்ளிரவு முதல் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து சென்னை ஆள்சேர்ப்பு அலுவலக இயக்குனர் கர்னல் கவுரவ் சேத்தி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் முன்னிலையில் உடல் தகுதி தேர்வு நடந்தது. 

இந்த தேர்வில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சமூக இடைவெளியுடன் இளைஞர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

சென்னையில் எழுத்து தேர்வு

முகாமில் பங்கேற்க வந்த இளைஞர்களில் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

அதில் 500 நபர்களாக பிரிக்கப்பட்டு கல்வி சான்று சரிபார்ப்பு, ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், கால்வாய் தாண்டுதல், புல்அப், ஜிக்ஜாக் பேலன்ஸ் உள்ளிட்ட உடல் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டது. 

முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் டாக்டர்கள், ஆம்புலன்ஸ் வசதிகள் மாவட்ட நிர்வாகத்தினால் செய்யப்பட்டு இருந்தது. 
முகாம் நடைபெறுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. 

இந்த உடற் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறும். 

உடல் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகளில் தேர்ச்சி பெற்றவர்கள், சென்னையில் நடைபெறும் எழுத்துத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

Next Story