திருக்கோவிலூர் ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆய்வு
திருக்கோவிலூர் ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆய்வு செய்தாா்
திருக்கோவிலூர்,
தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஜான்தாமஸ் நேற்று மதியம் சிறப்பு ரெயில் மூலம் திருக்கோவிலூர் ரெயில் நிலையத்துக்கு வந்தார். அதன்பிறகு அவர் நடைமேடைகளுக்கு சென்று பயணிகளுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, தண்டவாள பராமரிப்பு பணிகள் குறித்து ரெயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் கேட்டறிந்தார். அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் செந்தில் ஆகியோர் தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமசிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
காட்பாடி-தாம்பரம் ரெயில் சேவை
அந்த மனுவில் திருக்கோவிலூர் பகுதி ஆன்மிக தலங்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் ஏராளமான வெளியூர், வெளிமாநில பயணிகள் வந்து செல்வார்கள். எனவே இந்த வழியாக செல்லும் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில், திருப்பதி எக்ஸ்பிரஸ் உள்பட அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் நிறுத்தப்பட்டுள்ள காட்பாடி-தாம்பரம் ரெயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும். புதுச்சேரி- தாதர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலை வாரத்தில் 5 நாட்கள் இயக்க வேண்டும். இவ்வாறு மேற்கண்ட மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற ரெயில்வே பொது மேலாளர் ஜான்தாமஸ் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றார். முன்னதாக திருக்கோவிலூர் ரெயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட தண்டவாள பராமரிப்பு ஊழியர்களுக்கான ஓய்வறை மற்றும் பயணிகள் பொருட்கள் வைக்கும் அறையை ரெயில்வே பொது மேலாளர் ஜான்தாமஸ் திறந்து வைத்தார். அப்போது ரெயில் நிலைய அதிகாரிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story