சொத்தை அடைய மதுவில் விஷம் கலப்பு: கணவரை கொல்ல முயன்ற சதியில் நண்பன் பலி கைதான 2-வது மனைவி பரபரப்பு வாக்குமூலம்
பண்ருட்டியில் தொழிலாளி இறந்த வழக்கில் கணவரை கொன்று சொத்தை அடைய மதுவில் விஷம் கலந்த சதியில் நண்பன் பலியானது தெரியவந்தது.
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் செட்டி தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது 55). அதேபகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(45). நண்பர்களான இவர்கள் கூலி வேலை பார்த்து வந்தனர்.
கடந்த 8-ந்தேதி இருவரும், காடாம்புலியூரில் ஜோதி என்பவரது நிலத்தில் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமலிங்கம் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை தொடர்ந்து சற்று நேரத்தில் பாலமுருகனும் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், பாலமுருகன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. ராமலிங்கத்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ராமலிங்கம் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கணவருக்கு வைத்த விஷம்
மர்மமான முறையில் பாலமுருகன் உயிரிழந்தது குறித்து, அவரது மனைவி ஜானகி காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் மேற்பார்வையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் விஷம் கலந்த மதுவை பாலமுருகன் குடித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ராமலிங்கத்தின் மனைவி ஜெயக்கொடி (45) என்பவரிடம் விசாரித்தனர். அதில், அவர்தான் மதுவில் விஷம் கலந்து வைத்திருந்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
2-வது மனைவி
இதையடுத்து ஜெயக்கொடியை போலீசார் கைது செய்தனர். மேலும் விஷம் கலந்ததற்கான காரணம் குறித்து போலீசில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது கணவரின் முதல் மனைவி வசந்தா. இவர்களுக்கு வெற்றி வீரன் என்கிற மகன் உள்ளார். வசந்தா விஷம் குடித்து இறந்து விட்டார். இதன் பின்னர் என்னை ராமலிங்கம் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். எங்களுக்கு வசந்தி என்கிற மகள் உள்ளார். இவரை சிறுதொண்டமாதேவி கிராமத்தில் சுரேஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளோம்.
எனது கணவருக்கு வீட்டுமனை, சுமார் 2 ஏக்கர் முந்திரி காடு இருந்தது. இதன் பின்னர் நாங்கள் இருவரும் உழைத்து மேற்கொண்டு 6 ஏக்கர் நிலம் வாங்கினோம். வெற்றி வீரனை ஆசிரியர் வேலைக்கு படிக்க வைத்தேன்.
சொத்தை அடைய திட்டம்
தற்போது 8 ஏக்கர் நிலத்தை எனது கணவர் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரைக்கும் குத்தகைக்கு விட்டுள்ளார். எனது கணவர், தனது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்து கொட்டகையில் கறி சமைத்து அவர்களுடன் சேர்ந்து மது குடிப்பது வழக்கம். குடிபோதையில் என்னை அடித்து துன்புறுத்துவார். நிலம் குத்தகை மூலம் வந்த பணத்தை குடித்தே செலவு செய்து வந்தார். இதனால் நான் சொத்துக்களை எனது மகள் எதிர்காலத்துக்காக, என் பெயருக்கு மாற்றி கொடுக்கும்படி கேட்டேன்.
அப்போது அவர் அடித்து துன்புறுத்தினார். இதனால் என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் சொத்தை அடைய வேண்டும், அதற்கு இவர் இருக்கக்கூடாது எனறு முடிவு செய்தேன்.
என் கணவரை கொன்றுவிட்டால் சொத்து எனது பெயருக்கு மாறிவிடும் என்று திட்டம் போட்டேன்.
கொழுந்தனார் கொடுத்த மது
கடந்த வாரம் மா, பலா மரங்களுக்கு அடிப்பதற்காக பூச்சி மருந்தை ராமலிங்கம் வீட்டில் வாங்கி வைத்திருந்தார். இந்த விஷத்தை எப்படியாவது அவர் சாப்பிடுவதில் கலந்து கொன்றுவிட வேண்டும் என்று நேரம் பார்த்து கொண்டிருந்தேன்.
7-ந்தேதி மதியம் 12 மணிக்கு எனது கணவர், அவரது தம்பி குணசேகர் ஆகியோர் எங்கள் வீட்டுக்கு கறி சமைத்து மதுகுடிப்பதற்காக வந்தனர். அப்போது எனது கணவர் அங்கிருந்து சென்றுவிட்டார். ஆனால், எனது கணவரின் தம்பி குணசேகர், என்னிடம் அண்ணனின் பங்காக ஒரு குவாட்டர் உள்ளது என்று கூறி சீலுடன் மூடிய பாட்டிலை என்னிடம் தந்தார். நான் அதை வாங்கி, வீட்டில் வைத்தேன்.
விஷத்தை கலந்து வைத்தேன்
அன்று இரவு 8 மணிக்கு நான் தனிமையில் வீட்டில் இருந்த போது, இதுதான் சரியான நேரம் என்று நினைத்து எனது கணவருக்கு கொழுந்தனார் கொடுத்த மது பாட்டிலை எடுத்து திறந்தேன். அதில் இருந்த சிறிது மதுவை வெளியே ஊற்றிவிட்டு, அதில் பூச்சி மருந்தை சிறிதளவு ஊற்றி மூடி வைத்துவிட்டேன். இதை எனது கணவர் குடித்துவிட்டு இறந்துவிடுவார் என்று நினைத்தேன்.
மறுநாள் காலையில் எனது கணவர் வேலைக்கு சென்றதும், ஒரு திருமண விழாவுக்கு நான் சென்றுவிட்டேன். இந்த நிலையில் தான் எனது கணவரும், அவருடன் வேலைக்கு சென்றவரும் மயங்கி விழுந்துவிட்டதாக எனக்கு தகவல் வந்தது. இதனால் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்று மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். அதன்பின்னர் எனது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் எப்படியோ என்னை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சிறையில் அடைப்பு
இதையடுத்து, ஜெயக்கொடியை கைது செய்த போலீசார், அவரை பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story