மாற்றுத்திறனாளி பெண்ணின் திருமணத்துக்கு உதவிய போலீசார்


மாற்றுத்திறனாளி பெண்ணின் திருமணத்துக்கு உதவிய போலீசார்
x
தினத்தந்தி 10 Feb 2021 11:20 PM IST (Updated: 10 Feb 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

தாய், தந்தையை இழந்து தவித்த மாற்றுத்திறனாளி பெண்ணின் திருமணத்துக்கு போலீசார் பண உதவி செய்தனர்.

மூலக்குளம், 

புதுவை அருகே கோபாலன் கடை பகுதியை சேர்ந்தவர் கிருத்திகா (வயது 20). வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி. தாய், தந்தையை இழந்து தவித்த இவரை அவரது பெரியம்மா அன்னபூரணி வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் கிருத்திகாவுக்கும், சாரம் பகுதியை சேர்ந்த மணி என்கின்ற வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பொருளாதார சிக்கலில் இருந்த அன்னபூரணி, திருமண செலவுக்கு கஷ்டப்பட்டார். 

வாட்ஸ்-அப்பில்

இதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த ஒருவர், சமூக வலைதளமான வாட்ஸ்-அப்பில் மாற்றுத்திறனாளி பெண்ணின் திருமணத்துக்கு உதவுமாறு பதிவிட்டு உதவி கேட்டிருந்தார்.

இதை பார்த்த புதுவை ரெட்டியார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் அந்த பெண்ணுக்கு உதவ முன்வந்தார். இதுபற்றி தனது போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பியாரே ஜான், நாகமுத்து, சிவசங்கரன் ஆகியோரிடம் தெரிவித்தார். அவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் சிறு தொகையை உதவியாக பெற்றனர்.

போலீசார் பண உதவி

இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு கடந்த வாரம் திருமணம் நடந்து முடிந்தது. இதை அறிந்த போலீசார் மணமக்கள் கிருத்திகா- மணி ஆகியோரை போலீஸ் நிலையம் வரவழைத்து வெற்றிலை பாக்கு, பழம், வளையல், பட்டு சேலை, வேட்டி, சட்டை மற்றும் 10 ஆயிரம் ரொக்க பணத்தை வழங்கினர்.
இந்த உதவியால் கிருத்திகா, மணி மற்றும் உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்து போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.

Next Story