மீண்டும் மயக்க ஊசி செலுத்தியும் ஆட்கொல்லி யானை தப்பி ஓடியது


ஆட்கொல்லி யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு உள்ள காட்சி(வட்டமிட்டு காட்டப்பட்டு உள்ளது).
x
ஆட்கொல்லி யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு உள்ள காட்சி(வட்டமிட்டு காட்டப்பட்டு உள்ளது).
தினத்தந்தி 10 Feb 2021 11:26 PM IST (Updated: 10 Feb 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

பந்தலூரில் 3 பேரை கொன்ற ஆட்கொல்லி யானைக்கு மீண்டும் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. எனினும் அந்த யானை தப்பி ஓடியது.

பந்தலூர்,

பந்தலூரில் 3 பேரை கொன்ற ஆட்கொல்லி யானைக்கு மீண்டும் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. எனினும் அந்த யானை தப்பி ஓடியது. அதனை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

3 பேரை கொன்ற யானை

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடி அருகே கண்ணம்பள்ளி பகுதியை சேர்ந்த நாகமுத்து, கொளப்பள்ளியை சேர்ந்த ஆனந்தராஜ், அவருடைய மகன் பிரசாந்த் ஆகிய 3 பேரை காட்டுயானை மிதித்து கொன்றது. எனவே அந்த யானையை உடனடியாக பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து மயக்க ஊசி செலுத்தி கும்கிகள் உதவியுடன் அந்த யானையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி சமீபத்தில் அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. ஆனாலும் வனத்துறையினரிடம் சிக்காமல் அடர்ந்த வனப்பகுதிக்குள் தப்பி ஓடியது.
மீண்டும் மயக்க ஊசி
பின்னர் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், அந்த யானை கேரள மாநிலம் நிலம்பூர் வனப்பகுதியில் முகாமிட்டு இருப்பது தெரியவந்தது. அதனை இருமாநில வனத்துறையினரும் கண்காணித்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த யானை தமிழக-கேரள எல்லையை கடந்து சப்பந்தோடு வனப்பகுதிக்கு திரும்பியது. இதனால் மீண்டும் மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். எனினும் மயக்க ஊசி செலுத்த விடாமல் யானை டிமிக்கி கொடுத்து வந்தது. 

வனத்துறையினரை துரத்தியது

இந்த நிலையில் நேற்று புஞ்சைக்கொல்லி வனப்பகுதிக்குள் அந்த யானை முகாமிட்டு இருந்தது. அப்போது அதனை கண்காணித்து கொண்டு இருந்த வனத்துறையினர் உதவியுடன் கால்நடை டாக்டர்கள் அந்த யானைக்கு மீண்டும் மயக்க ஊசி செலுத்தினர்.

இதனால் ஆக்ரோஷம் அடைந்த யானை அவர்களை துரத்தியது. உடனே அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். சிறிது தூரம் துரத்தி வந்த யானை, அதன்பிறகு அடர்ந்த வனப்பகுதியை நோக்கி திரும்பி ஓடியது. 

தீவிர கண்காணிப்பு

அதனை பின்தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் குழுவினர் சென்றனர். அப்போது பத்துலைன்ஸ் வனப்பகுதியில் பிற காட்டுயானைகளுடன் அந்த யானை முகாமிட்டு இருப்பது தெரியவந்தது. இரவு நேரம் நெருங்கியதால், யானையை பிடிக்கும் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இன்று(வியாழக்கிழமை) மீண்டும் காட்டுயானையை பிடிக்கும் பணி தொடங்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து அந்த யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பிணத்துடன் காத்திருந்த மக்கள்

இதற்கிடையில் பாலவாடி லைன்ஸ் பகுதியில் இறந்த மணி என்பவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் கொண்டு சென்றனர். அப்போது அந்த ஆட்கொல்லி யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்ட தகவல் பரவியது. இதனால் அடக்கம் செய்யப்படும் இடத்துக்கு செல்ல அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. 

இதனால் பிணத்துடன் அவர்கள் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் அந்த யானை அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்றதும், அவர்களுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story