மின்கம்பம் மீது மோதியதில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்தது காளப்பநாயக்கன்பட்டி அருகே பரபரப்பு


மின்கம்பம் மீது மோதியதில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்தது  காளப்பநாயக்கன்பட்டி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 11 Feb 2021 12:25 AM IST (Updated: 11 Feb 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

காளப்பநாயக்கன்பட்டி அருகே மின்கம்பம் மீது மோதியதில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேந்தமங்கலம்:
காளப்பநாயக்கன்பட்டி அருகே மின்கம்பம் மீது மோதியதில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வைக்கோல் லாரி
மதுரை மாவட்டம் வையூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 25). லாரி டிரைவர். இவர் திருவாரூர் பகுதியில் இருந்து வைக்கோல்களை வாங்கி லாரியில் ஏற்றி கொண்டு நாமக்கல் மாவட்டத்திற்கு விற்பனைக்காக கொண்டு வந்தார். அங்கு பல்வேறு பகுதிகளில் வைக்கோல் கட்டுகளை விற்பனை செய்தார். 
இந்த லாரியில் அளவுக்கு அதிகமாக வைக்கோல் பாரம் ஏற்றப்பட்டு இருந்தது. இதனால் சேந்தமங்கலம் மஜித் தெருவில் லாரியில் இருந்த வைக்கோல் கட்டுகள் மின் வயர்களில் உரசியவாறு சென்றது.
தீ கொளுந்து விட்டு எரிந்தது
இந்தநிலையில் காளப்பநாயக்கன்பட்டி அருகே நஞ்சுண்டாபுரம் கிராமத்திற்கு லாரி வந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த மின் கம்பத்தின் மீது மோதியது. இதில் மின் கம்பம் முறிந்து லாரி மீது விழுந்தது. அப்போது மின் கம்பிகள் ஒன்றோடொன்று உரசியதில் லாரியில் இருந்த வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது. மளமளவென லாரி முழுவதும் பரவிய தீ, கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. 
இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்புசாமி உடனடியாக லாரியில் இருந்து கீழே குதித்து ஓடினார். மேலும் அவர் இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கும், மின்சார வாரியத்திற்கும் தகவல் தெரிவித்தார். லாரி தீப்பிடித்து எரிந்த இடம் குடியிருப்பு பகுதி என்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் விசாரணை
இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள், மின் ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர். அப்போது மின் ஊழியர்கள் அந்த பகுதியில் மின்சாரத்தை நிறுத்தினர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், வைக்கோல் கட்டுகளை அகற்றியும் தீயை அணைத்தனர். 
இந்த தீ விபத்தில் லாரி முழுவதும் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story