தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை அமைச்சர் தங்கமணி பேட்டி
கொரோனாவின் தாக்கம் குறைந்து மின்சார தேவை அதிகரித்து இருந்தாலும் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை என அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல்:
கொரோனாவின் தாக்கம் குறைந்து மின்சார தேவை அதிகரித்து இருந்தாலும் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை என அமைச்சர் தங்கமணி கூறினார்.
மின்தட்டுப்பாடு இல்லை
நாமக்கல்லில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் வந்தாலும், கோடைக்காலம், மழைக்காலம் உள்பட எந்த காலத்திலும் தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளதால் தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுகிறது. கொரோனா கால பாதிப்புகள் குறைந்து, தற்போது மின் தேவைகள் அதிகரித்து இருந்தாலும், மின் உற்பத்தி திருப்திகரமாக உள்ளதால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை.
விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பது குறித்து, 4 மாவட்ட விவசாயிகளிடம் ஏற்கனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. விருதுநகர்-கோவை பாதையில் உயர் மின் கோபுரம் அமைப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அதை நிறுத்தி வைக்க வேண்டும் என விவசாயிகள் பேச்சுவார்த்தையின் போது கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.
அரசாணைப்படி இழப்பீடு
மேலும் மற்றொரு கோரிக்கையாக மத்திய அரசு அளிப்பது போன்று இழப்பீடு, மாநிலத்தில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கேட்டு உள்ளனர். இதுகுறித்து முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என சொல்லி உள்ளேன்.
மேட்டூர், வட சென்னை, தூத்துக்குடி போன்ற மின் உற்பத்தி நிலையங்களில் முன்பு கொரோனா காலத்தில் தேவைக்கு மட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது முழுமையாக மின் உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது.
விஷம பிரசாரம்
கொல்லிமலையில் அமைக்கப்பட்டு வரும் நீர்மின் திட்டம், சுரங்கப்பாதை பணிக்காக வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டி உள்ளதால் தாமதமாகி வருகிறது. இன்னும் ஓராண்டுக்குள் அந்த பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கரூர் மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரம் செய்ய வரும்போது, நாமக்கல் மாவட்டத்தில் விடுபட்டுள்ள பரமத்திவேலூர் தொகுதியில் தமிழக முதல்-அமைச்சர் பிரசாரம் செய்ய உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாமல் உள்ளார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது குறித்து அமைச்சர் தங்கமணியிடம் நிருபர்கள் கேட்டபோது, துணை முதல்-அமைச்சர் ஒருமுறை வாய்தா கேட்டார். பின்னர் எப்போது வேண்டுமானாலும் செல்வதாக கூறினார். ஆனால் இந்த விஷயத்தில் எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே விஷம பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.
Related Tags :
Next Story