ஜெருசலேம் புனித பயணத்துக்கு கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -கடலூா் கலெக்டர் தகவல்


ஜெருசலேம் புனித பயணத்துக்கு கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -கடலூா் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 11 Feb 2021 12:34 AM IST (Updated: 11 Feb 2021 12:34 AM IST)
t-max-icont-min-icon

ஜெருசலேம் புனித பயணத்துக்கு கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.

கடலூா்:

தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து பிரிவினர்களையும் உள்ளடக்கிய கிறிஸ்தவர்கள், ஜெருசலேம் புனித பயணம் செல்லும் திட்டம் கடந்த 2011-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 500 கிறிஸ்தவர்கள் பயன்பெறும் வகையில் அரசின் நிதி உதவியாக தலா ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. 

இப்பயணமானது மவுண்ட் ரோபா, பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் ஆகிய இடங்கள் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது.
இந்த திட்டம் கிறிஸ்தவ மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை 500-ல் இருந்து 600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அவற்றில் 50 கன்னியாஸ்திரிகள், அருட்  சகோதரர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிதிஉதவி

மேலும் நடப்பாண்டில் இத்திட்டத்திற்கென அரசின் நிதி உதவி ஒரு நபருக்கு ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.37 ஆயிரமாக உயர்த்தி வழங்கி, அரசு ஆணையிட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு ஓராண்டு செல்லத்தக்க பாஸ்போர்ட் மற்றும் மருத்துவ உடற்தகுதி பெற்றிருத்தல் வேண்டும். 70 வயது நிறைவடைந்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், அவருக்கு துணையாக அவர் விரும்பும் நபர் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். 

இதற்கான விண்ணப்பபடிவம்http://www.bcmbcmw.tn.gov.in/form/jerusalem என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கலச மகால், பாரம்பரியக்கட்டடம், சேப்பாக்கம், சென்னை - 5 என்ற முகவரிக்கு அனுப்பி வைத்து கிறிஸ்தவர்கள் பயன்பெறலாம். மேற்கண்ட தகவல் கடலூா் மாவட்ட கலெக்டா் சந்திரசேகா் சாகமூாி  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Next Story