ஸ்ரீமுஷ்ணத்தில் தொழிலாளி அடித்து கொலை


ஸ்ரீமுஷ்ணத்தில் தொழிலாளி அடித்து கொலை
x
தினத்தந்தி 11 Feb 2021 12:56 AM IST (Updated: 11 Feb 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீமுஷ்ணத்தில் குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளி கழுத்தில் மின்கம்பி கட்டி இழுத்து செல்லப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தாய் மற்றும் தம்பியை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வாணக்காரத்தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மனைவி குப்பாயி (வயது 65). இவர்களுடைய மகன்கள் பாஸ்கரன் (36), பிரபாகரன் (31). தொழிலாளியான பாஸ்கரன் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்து குடும்பத்தினரிடமும், தெருமக்களிடமும் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. குறிப்பாக தெருவில் உள்ள பெண்களிடமும் தகராறு செய்து வந்ததால் குப்பாயி, பிரபாகரன் ஆகியோர் தங்களது குடும்ப மரியாதை பறிபோகிறதே என்று எண்ணி கவலை அடைந்து வந்தனர்.

 இதையடுத்து அவர்கள் பாஸ்கரனை கண்டித்தனர். இருப்பினும் அவர் தொடர்ந்து மது குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பாஸ்கரன் மது போதையில் வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்தார். 

கொலை

இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன் மற்றும் குப்பாயி மின் கம்பியை பாஸ்கரனின் கழுத்தில் கட்டி தெருவில் இழுத்து சென்று கட்டையால் தாக்கினர். தொடர்ந்து அரிவாளால் வெட்டினர். இதில் துடிதுடித்து பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

 இது குறித்த தகவலின் பேரில் சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு  சுந்தரம் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பாஸ்கரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ரங்கசாமி அளித்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குப்பாயி, பிரபாகரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். 
மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட தொழிலாளியை தாயும், தம்பியும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story