பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும்


திப்பம்பட்டியில் நடந்த விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரசார பயணத்தில் கனிமொழி எம்.பி. பேசிய போது எடுத்த ப
x
திப்பம்பட்டியில் நடந்த விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரசார பயணத்தில் கனிமொழி எம்.பி. பேசிய போது எடுத்த ப
தினத்தந்தி 11 Feb 2021 1:38 AM IST (Updated: 11 Feb 2021 1:40 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் நடந்த பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரசார பயண நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது

 நீட் தேர்வை கண் துடைப்பிற்காக அதை எதிர்த்து விட்டு, நம்முடைய பிள்ளைகளின் எதிர்கால மருத்துவ கனவை சுக்குநூறாக ஆக்கியது அ.தி.மு.க. ஆட்சி. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வருகின்றனர்.

 இந்த சட்டங்கள் வந்தால் உங்களுடைய நிலத்தில் எதை விளைவிக்கனும், எதை பயிரிடனும், எதை அறுக்கனும் என்று கார்பரேட் நிறுவனங்கள் தான் முடிவு செய்யும். 

தமிழகத்தில் இந்த ஆட்சியை நம்பி எந்த முதலீடும் வரவில்லை. தொழிற்சாலைகளை யாரும் தொடங்கவில்லை. வெளிமாநிலத்தில் இருப்பவர்கள் நம்முடைய அரசு பணிகளை பெற்றுக் கொண்டு செல்ல கூடிய ஒரு சூழ்நிலை உள்ளது. 

இது எல்லாம் மத்தியில் இருக்க கூடிய அரசை மகிழ்விக்க, அவர்களை குளிர்வித்து ஆட்சியில் இருக்க நம்முடைய இளைஞர்களின் எதிர்காலத்தை விட்டு கொடுத்து இருக்க கூடியது அ.தி.மு.க. ஆட்சி.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று கூறிய ஓ.பன்னீர் செல்வத்திற்கு துணை முதல்-அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. பதவி கிடைத்ததும் அடுத்த நாளே அதை அவர் மறந்து விட்டார். ஆணையம் இதுவரைக்கும் எந்த அறிக்கையும் தரவில்லை. 

ஆஜராக கூறியும் இதுவரைக்கும் ஆஜராகவில்லை. விசாரணைக்கு அழைத்தும் செல்லவில்லை. ஒரு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கே பாதுகாப்பு இல்லை. அவரது மரணத்தில் மக்களுக்கு இருக்க கூடிய கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு விடை இல்லை.

 அ.தி.மு.க.வில் தன்னுடைய கட்சி தொடர்பாக எந்த முடிவாக இருந்தாலும் டெல்லிக்கு சென்று மோடி, அமித்ஷாவை பார்த்து முடிவு எடுக்கும் நிலை உள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. குற்றவாளிகளை பாதுகாப்பதில் அ.தி.மு.க. ஆட்சி அக்கறை காட்டுகிறது. 

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பாதிக்கப்பட்டு பெண்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும். பெண்களுக்கான பாதுகாப்பு தி.மு.க. ஆட்சியில் உறுதி செய்யப்படும். 

இந்த பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story