பல மாதங்களுக்கு பிறகு திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் கல்வாழை பரிகாரம் தொடங்கியது
பல மாதங்களுக்குப் பிறகு திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் கல்வாழை பரிகாரம் தொடங்கியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமயபுரம்,
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பஞ்சீலி நீலிவனநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இக்கோவிலில் உள்ள கல்வாழைக்கு பரிகாரம் செய்தால் தடைப்பட்ட திருமணம் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். மேலும், இங்கு எமனுக்கு என்று தனி சன்னதி உள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் மதவேறுபாடுகளின்றி தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து கல்வாழைக்கு பரிகாரம் செய்தும், எமனை தரிசனம் செய்து விட்டும் செல்வார்கள்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த பல மாதங்களாக கோவிலில் பரிகாரம் மற்றும் பூஜைகள் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஏற்கனவே உள்ள நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்து இருந்தது.
இதன் காரணமாக திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலுக்கு நேற்று திருமணம் ஆகாத ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் வந்து பரிகாரம் செய்து விட்டு சென்றனர். பல மாதங்களுக்குப் பிறகு கோவிலில் வந்து சாமி தரிசனம் செய்ததும் கல்வாழை பரிகாரம் செய்ததும் பக்தர்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Related Tags :
Next Story