விபத்தில் இறந்த மகனின் சாவில் மர்மம் உள்ளது; போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெற்றோர் மனு
விபத்தில் இறந்த மகனின் சாவில் மர்மம் உள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெற்றோர் மனு கொடுத்தனர்.
ஈரோடு
ஈரோடு சூரம்பட்டி அண்ணா வீதியை சேர்ந்த பால்ராஜ் தனது உறவினர்களுடன் வந்து, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்தாவது:-
நான் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறேன். என்னுடைய மகன் சின்னையாவுக்கு (வயது 27) திருமணமாகி தாரணி என்ற மனைவியும், ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி என்னுடைய மகனுக்கு அவரது நண்பர் போன் செய்து பெருந்துறையில் உள்ள கோவிலுக்கு வருமாறு அழைத்தார். அதன்பேரில் எனது மகன் அவருடன் சென்றான்.
இந்த நிலையில் அன்று இரவு 9 மணி அளவில் எனது மகன் போனில் இருந்து அவரது நண்பர் என்னிடம் தொடர்பு கொண்டு உங்கள் மகனுக்கு விபத்து நடந்து விட்டது என்று கூறினார். இதையடுத்து சிறிது நேரத்தில் போலீசார் போன் செய்து ‘உங்கள் மகன் சென்ற மோட்டர் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றின் திட்டில் மோதி அவர் அடிபட்டு இறந்து விட்டார்’ என்று தெரிவித்தனர்.
ஆனால் என்னுடைய மகனுடன் சென்றவர் எந்த ஒரு காயம் இல்லாமல் உயிர் தப்பி உள்ளார். இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. நடந்தது விபத்தல்ல. என்னுடைய மகன் சாவில் மர்மம் உள்ளது. எனவே தாங்கள் இதுகுறித்து விசாரித்து உண்மை நிலவரத்தை தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.
இவர்களுடன் சின்னையாவின் மனைவி தாரணி பிறந்து 40 நாட்களே ஆன ஆண் குழந்தையுடன் வந்திருந்தார்.
Related Tags :
Next Story